
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மே 12-இல் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' எனப் பேசினார். இந்தப் பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் கமல்ஹாசன் மீது மத கலவரத்தை தூண்டு வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. விடுமுறை கால அமர்வில் அவசர கால வழக்காக விசாரிக்க முடியாது, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்களோ, அரசியல் கட்சியினரோ விவாதிக்கக் கூடாது என தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மே 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தன் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தான் நாதுராம் கோட்சேவைத் தான் தீவிரவாதி என்று விமர்சித்ததாகவும், அனைத்து ஹிந்துக்களையும் தீவிரவாதி என்று குறிப்பிடவில்லை எனவும் கமல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
எனவே சம்பந்தப்பட்ட நீதிபதி முன் ஆஜராகி 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று கூறி கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.புகழேந்தி, திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.