எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம்: ஸ்டாலின் கொந்தளிப்பு 

எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம் என்று எட்டு வழிச் சாலைத் திட்ட மேல்முறையீட்டு  விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம்: ஸ்டாலின் கொந்தளிப்பு 
Published on
Updated on
2 min read

சென்னை: எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம் என்று எட்டு வழிச் சாலைத் திட்ட மேல்முறையீட்டு  விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் வாக்காளர்களைச் சந்தித்த மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, “இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது” என்று வாக்குறுதி அளித்தார். அதை முன்னிறுத்தி வாக்கும் கேட்டார். ஆனால் முதலமைச்சரையும் மேடையில் வைத்துக்கொண்டு “சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த மாண்புமிகு நிதின் கட்கரி அவர்கள் பேசிய போது அதற்கு எதிர்ப்புக் கூட தெரிவிக்காமல், அதையும் ஆமோதிப்பதைப் போல முதலமைச்சர் அமைதி காத்தார். அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களும் மவுனமாகவே மேடையில் அமர்ந்திருந்தார். இப்போது அது தொடர்கிறது.

தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு - குறிப்பாக முதலமைச்சரின் மாவட்டத்திலேயே தோற்ற பிறகு - எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். ஒரு பாராளுமன்றத் தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும் - எரிச்சலிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூடக் கொடுக்காமல் அவமதித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. “பதவி” கேட்ட அ.தி.மு.க அரசை “பக்குவமாக” மிரட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உடந்தையாக இருக்க வைத்துள்ளது. ஆகவே, எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தொடங்கி விட்டது என்பதையே இந்த மேல்முறையீடு காட்டுகிறது.

இந்த சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை “பரிசாக” மக்கள் கொடுத்தும், இன்னும் இரு அரசுகளுமே பாடம் கற்கவில்லை. தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும்- தமிழக மக்களை வஞ்சித்து பழி வாங்க துடிப்பதையும் கைவிடவில்லை. “அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்” என்று சொன்ன பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் செயல்பாடு பதவியேற்ற அடுத்த நாளே தமிழ்நாட்டிற்கு விரோதமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு போலி சொந்தம் கொண்டாடிய டாக்டர் அன்புமணி, இப்போது அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை, மாநிலங்கள் அவை-அமைச்சர் பதவிக்காக, கைகட்டி வேடிக்கை பார்க்கப் போகிறாரா அல்லது எதிர்ப்பு காட்ட கூட்டணியிலிருந்து பா.ம.க விலகும் முடிவை எடுக்கப் போகிறாரா? என்று பாதிக்கப்படும் மக்கள் கேட்கிறார்கள்!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com