திண்டுக்கல்:கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய ஊரக வேலைத் திட்டப் பயனாளிகளை 15 வகையான விவசாயப் பணிகளோடு, வேளாண் பயிர்கள் நடவு, களை எடுத்தல், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த பின், விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம் உயர்ந்தது. அதேநேரத்தில், விவசாயப் பணிகளுக்கு வரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போனது. இதனால், விவசாயப் பணிகள் நடைபெறும் காலங்களில், 100 நாள் வேலைத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது அந்தப் பணியாளர்களை விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வயல் வரப்பு மேம்படுத்துதல், கல் வரப்புகள் அமைத்தல், தரிசு நிலத்தை மேம்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடுதல், உரக்குழி அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பட்டுப்புழு வளர்த்தல், ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகை அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், தனிநபர் நாற்றங்கால் அமைத்தல், அசோலா பயிரிடுதல் உள்ளிட்ட 15 வகையான பணிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநரகம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், நெல், சோளம், பயறு போன்ற பயிர்களை நடவு செய்தல், களை எடுத்தல், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி, நெல், சோளம், பயறு போன்ற பயிர்களின் நடவுக்கும் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயி எஸ். பாத்திமா ராஜரத்தினம் கூறியதாவது: பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பட்டுப் புழு மற்றும் கால்நடைத் துறை பணிகளுக்கும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உணவு தானியங்களான நெல், சோளம், பயறு வகைகள் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
வேளாண் தொழிலுக்கே அதிக அளவில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், நடவு, களை வெட்டுதல், அறுவடை உள்ளிட்டப் பணிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் இரா.சச்சிதானந்தம்: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களை பொருத்தவரை, நிலையான சொத்துகளை உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதில், திருத்தம் செய்து விவசாயம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம், சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற முடியும் என்பதுடன், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளின் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
-ஆ. நங்கையார்மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயா்வு!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

புதிய முதலீடு? வியட்நாம் அதிபரை சந்தித்த கெளதம் அதானி!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



