கொள்ளிடம் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்

கொள்ளிடம் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
Published on

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவே மேலராமநல்லூர், கீழராமநல்லூர் என இரு கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் விதமாக கிராமத்தின் வடக்கு பகுதியில் அழகியமணவாளன் கிராமத்தை இணைத்து உயர்மட்ட பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இருந்தும் அந்தக் கிராம மக்கள் தங்கள் வயல்களில் விளையும் காய்கறி பொருள்கள், கீரைகளை மறுபுறம் உள்ள தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம், பாபநாசம், கும்பகோணம் பகுதியில் சென்று விற்க, அரை கி.மீ. தூரம் கொண்ட கொள்ளிடம் ஆற்றின் தென் பகுதியை தண்ணீர் இல்லாத நாள்களில் நடந்தே கடந்து விடுவர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரும்போது அங்கு இயக்கப்படும் படகு மூலம் சென்று வருவர்.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அன்று முதல் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் படகு மூலம் மேற்கண்ட நகரப்பகுதிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை மாலை கொள்ளிடத்தின் தென் பகுதியிலிருந்து 40 பேர் ஒரு படகில் மேலராமநல்லூருக்கு சென்றனர். சிறிது தூரம் சென்ற படகு பாரம் தாங்காமல் நீரில் மூழ்கியது. 

இதையடுத்து ஒருவரை ஒருவர் பிடித்தபடி 20 பேர் மேலராமநல்லூர் கரையை அடைந்து, அப்பகுதியில் இருந்த மணல் திட்டில் ஒதுங்கினர். தகவலறிந்த கபிஸ்தலம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் இளைஞர், கிராம மக்கள் உதவியுடன் அவர்களை 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். 

தகவலறிந்து சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் அவர்களை கிராமங்களுக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, ராணி, உள்ளிட்ட 3 பேரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாயமான 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com