"நீர்மேலாண்மைக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன ?” என்று முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள். நீர்மேலாண்மைத் திட்டங்கள்- நதி நீர்த் திட்டங்கள்- நீர்த் தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், ‘கமிஷன் கலாச்சாரத்தில்’ முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி திரு. பழனிசாமி முதலமைச்சராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும்.