18 ஆண்டுகாலம் பலவித நெருக்கடிகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே இயக்கத்தை வளர்த்து, 1967ல் தி.மு.கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய பேரறிஞர் அண்ணா தனது ஆட்சியை, பெரியாருக்குக் காணிக்கை என்றார். வெறும் சொல்லால் அல்ல, செயல்களால்! அந்தப் பேரறிஞரின் அன்புத் தம்பியாம் நம் அருமைத் தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கழகத்தைக் கட்டிக்காத்து, நெருப்பாறுகளைக் கடந்து, கோடானுகோடி உடன்பிறப்புகளின் உற்ற துணையுடன் அரை நூற்றாண்டு காலம் தலைமைப் பொறுப்பேற்று, தமிழ்ச் சமுதாயம் ஈடேற, பெரியாரின் பெருங்கனவுகளை நிறைவேற்றினார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையும் நிறைவேற்றி, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்து ‘இது பெரியார் மண்’ என்பதை உலகத்திற்கு உறுதிப்படுத்தினார்.