இதையடுத்து, பிற மாநிலத்தவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாணவர்கள் எதன் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்றனர் என்பதோடு அவர்களின் இருப்பிடச் சான்று குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாணவர்களின் ஆவணங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டப் பிறகே, கலந்தாய்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, கலந்தாய்வு அழைப்பு குறித்த விவரங்களை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதற்காக தான் வெளிமாநிலத்தவர் என கூறப்படும் 126 பேரும் எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் பிற மாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதன் அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.