ராகுல் காந்தி பேசாததை பேசியதாக கயிறு திரிக்கிறார்: எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி கண்டனம் 

ராகுல் காந்தி பேசாததை பேசியதாக கயிறு திரிக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசாததை பேசியதாக கயிறு திரிக்கிறார்: எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி கண்டனம் 

சென்னை: ராகுல் காந்தி பேசாததை பேசியதாக கயிறு திரிக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பிரதமர் மோடியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேனி பொதுக்கூட்டத்தில் ‘மூன்று நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி கர்நாடகத்தில், நான் பிரதமராக பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் என்று பேசாததை பேசியதாக கூறியிருக்கிறார். இந்த பேச்சிற்கு என்ன ஆதாரம் ? என்ன அடிப்படை ? எந்த ஊடகத்திலாவது திரு. ராகுல்காந்தி அவர்கள் இப்படி பேசியதாக வெளிவந்திருக்கிறதா ? அதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியிட முடியுமா ?

மேகதாது பிரச்சினையில் தமிழ்நாட்டு நலன்களை, உரிமைகளை மத்திய அரசிடம் தாரை வார்த்தது யார் ? ரூ.6 ஆயிரம் கோடி செலவில் மேகதாதுவில் அணை கட்ட ஆரம்பகட்ட ஆய்வு நடத்த மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியது. இந்த அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய நீர்வள ஆணையம் கர்நாடக அரசுக்கு கடந்த 2018 நவம்பர் 26 அன்று அனுமதி அளித்தது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் எந்த மாநில அரசும் மேற்கொள்ள முடியாது.

இந்நிலையில் திடீரென கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய நீர்வள ஆணையம் எந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டது ? மத்திய நீர்வள ஆணையம் என்பது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அவரது  ஆலோசனையின் பேரில் தான் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த கையாலாகாத நிலையில் அ.தி.மு.க. அரசு இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது. இதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேகதாதுவில் அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்த வழக்கு தொடுத்தது. ஆனால் இதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இதுவரை கடந்த 11 மாதங்களாக தலைவர் பொறுப்பில் எவரும் நியமிக்கப்படவில்லை. காவிரி நீர்வளத்துறை செயலாளர் எஸ். மசூத் உசேன் தான் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமைப் பொறுப்பையும் கூடுதலாக வகித்து வருகிறார். இதனால் மத்திய பா.ஜ.க. அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடக மாநில பா.ஜ.க.வின் நலனில் அக்கறை காட்டுகிற வகையில் மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி அளித்திருக்கிறார். பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை  எதிர்க்க  50 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க.விற்கு துணிவில்லாமல் போனது ஏன் ? பா.ஜ.க.வை எதிர்ப்பதில் என்ன தயக்கம் ? இத்தகைய போக்கு காரணமாகத் தான் தமிழ்நாட்டின் பல உரிமைகள் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் தேவையில்லாமல் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பேசாததை பேசியதாக கயிறு திரித்து அவதூறு பிரச்சாரம் செய்கிற வேலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டிப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com