திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு: பூட்டுத் தொழில் மீண்டும் மறுமலர்ச்சி அடைய வாய்ப்பு

நீண்டகால கோரிக்கைக்குப் பின் நலிவடைந்து வரும் திண்டுக்கல் பூட்டுத் தொழிலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், திண்டுக்கல் பூட்டுத் தொழில் மீண்டும் மறுமலர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக,
திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு: பூட்டுத் தொழில் மீண்டும் மறுமலர்ச்சி அடைய வாய்ப்பு

நீண்டகால கோரிக்கைக்குப் பின் நலிவடைந்து வரும் திண்டுக்கல் பூட்டுத் தொழிலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், திண்டுக்கல் பூட்டுத் தொழில் மீண்டும் மறுமலர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக, தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
       திண்டுக்கல்லுக்கு உலக அளவில் புகழ் சேர்க்கும் பூட்டுத் தொழிலுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாங்காப் பூட்டு, சதுரப் பூட்டு,  பெட்டிப் பூட்டு, கொத்துப் பூட்டு, பார்ட்டனர்ஷிப் லாக் (4 சாவி பூட்டு), மாஸ்டர் கீ பூட்டு, சாவி பிடிக்கிற பூட்டு, பெல் பூட்டு, டபுள் லாக், கோயில் பூட்டு என 24 வகையான பூட்டுகள் திண்டுக்கல் நகரில் உற்பத்தி செய்யப்பட்டாலும், மாங்காப் பூட்டு மட்டுமே திண்டுக்கல்லின் அடையாளமாக இருந்து வருகிறது. 
       திண்டுக்கல் நாகல் நகர், நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மாலைப்பட்டி, பாலமரத்துப்பட்டி, குட்டியப்பட்டி ஆகிய இடங்களில் 100 தொழிலாளர்களுடன் நலிவடைந்த நிலையில், பூட்டுத் தொழில் நடைபெற்று வருகிறது. அதே நேரம், திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளர் தொழிற்கூட்டுறவு சங்கம் ஆண்டுக்கு வர்த்தக இலக்காக  ரூ.30 லட்சம் நிர்ணயித்து பூட்டுகளை உற்பத்தி செய்துவரும் நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் திணறி வருகிறது.
     இதுபோன்ற சூழலில், திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், பூட்டுத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
      இது தொடர்பாக, திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் ஏ. பிரேம்குமார் மற்றும் தலைவர் ஏ.எம். முருகன் ஆகியோர் கூட்டாகக் கூறியதாவது: பூட்டுத் தொழிலை பாதுகாக்கவும், வளர்ச்சிக்கு உதவக் கோரியும் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தோம். எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில், இத்தொழில் முடங்கிவிட்டது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், திண்டுக்கல் பூட்டுத் தொழில் மறுமலர்ச்சி பெறும் என நம்புகிறோம். ஆனாலும், பூட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டியை குறைக்கவும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
      திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்க செயலர் (பொறுப்பு) இரா. மனோகர பாண்டியன் கூறியது: 3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உலக  வர்த்தக மாநாட்டில் பங்கேற்று, சங்கத்தின் சார்பில் புவிசார் குறியீடு தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான கோப்புகள் கிடைத்த பின்னரே, மாங்காய் பூட்டுக்கு மட்டும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதா அல்லது கை வேலைப்பாடுகளுடன் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான பூட்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்பது தெரியவரும். 
      புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் மூலம், உலக மக்களின் கவனத்தை திண்டுக்கல் பூட்டு மீண்டும் ஈர்க்கும் என நம்புகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com