ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயார்: தில்லியில் இருந்து திரும்பிய திருநாவுக்கரசர் பேட்டி 

ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயார் என்று தில்லியில் இருந்து திரும்பிய மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயார்: தில்லியில் இருந்து திரும்பிய திருநாவுக்கரசர் பேட்டி 

சென்னை: ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயார் என்று தில்லியில் இருந்து திரும்பிய மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றி, அந்த பதவிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியை  நியமனம் செய்து ஞாயிறன்று அறிவிப்பு வெளியானது. அதைத் தொடந்து திருநாவுக்கரசர் திங்களன்று தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் காலை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயார் என்று தில்லியில் இருந்து திரும்பிய மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இருந்து திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவராக சோனியா இருந்த போது சோனியா மற்றும் ராகுல் முன்னிலையில் நான் காங்கிரஸ் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். பின்னர் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கனா ஆகிய மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்து கட்சிப் பணி செய்ய வாய்ப்பளித்தனர்.

பின்னர் என்னை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தனர். கடந்த இரண்டரை வருடங்களாக நான் சிறப்பான முறையில் பணி புரிந்து வந்தேன். மாநில தலைவராக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட தலைவர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன். பூத் உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் தகுந்தவர்களை அனைவருடனும் ஆலோசித்து நியமனம் செய்தோம்.

காங்கிரஸ் வரலாற்றில் முதன்முறையாக சொத்து மீட்புக் குழு என்பதை உருவாக்கி, மாநிலம் முழுவதும் சுமார் 175 இடங்களில் காங்கிரசுக்கு சொந்தமான ரூ. 500 கோடி மதிப்பு சொத்துக்களை மீட்டுள்ளோம். பின் அதை முறையாக காங்கிரஸ் அறக்கட்டளையிடம் சேர்த்துள்ளோம்.

எனது பொறுப்புகள் குடுத்து அழகு பார்த்த ராகுலுக்கு அதை மாற்றவும் உரிமை உண்டு. அதன்படி மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வேணுகோபால் மற்றும் முகுல் வாஸ்னிக் இருவரும் என்னைத் தொடர்பு கொண்டு தலைமை மாற்றம் குறித்து ராகுலின் விருப்பதைத் தெரிவித்தனர். பின்னர் மறுநாள் பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியானது. அதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுலை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்  இந்த சந்திப்பு சிறப்பான, மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது. எங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பர அன்பும் மரியாதையும் உள்ளது.

காங்கிரஸ் தலைவராக இருந்ததை விட இப்போது இன்னும் வேகமாக செயல்படுவேன். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பேன்.

எனக்கு தலைவனாக இருப்பது தொண்டனாக இருப்பது என்பது குறித்தெல்லாம் வித்தியாசம் கிடையாது; ராகுலை பிரதமர் ஆக்குவதற்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com