காலமானார் எழுத்தாளர் சாருகேசி

மூத்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான சாருகேசி என்கிற எஸ்.விஸ்வநாதன் (80),  சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். 
காலமானார் எழுத்தாளர் சாருகேசி


மூத்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான சாருகேசி என்கிற எஸ்.விஸ்வநாதன் (80),  சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். 
அவருக்கு 4 சகோதரிகள், 2 சகோதரர்கள் உள்ளனர். மஞ்சரி இதழின் ஆசிரியராக இருந்து மறைந்த லெமன் என்கிற லெட்சுமணன் இவரது மூத்த சகோதரர். 
கடந்த 1938- ஆம் ஆண்டு பாலக்காட்டில்  பிறந்த  சாருகேசி எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார்.  ஃபைஸர் மருந்து நிறுவனத்தில் 1957-இல் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்தார்.  
இதையடுத்து தமிழின் பிரபல வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.  சாருகேசியின் முதல் கட்டுரை கண்ணன் (1955) இதழில் வெளியானது. அதற்கு வழங்கப்பட்ட சன்மானம் ரூ.5. முதல் சிறுகதை கல்கியில் (1960) வெளியானது. 
சாருகேசி நிறைய கச்சேரிகள் கேட்டு, புத்தகங்கள் படித்து தனது கர்நாடக இசை அறிவைப் பெருக்கிக் கொண்டார். 
தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கீத,  நாட்டிய,  நாடக விமர்சனங்கள் எழுதி வந்த சாருகேசி சுமார் 60 ஆண்டுகளாக எழுத்துலகுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  ஆனந்த விகடன் தேவனின் படைப்புகள் நூலாக வெளிவருவதற்கு இவர் (சாருகேசி) முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.  
கல்கி இதழில் அவர் எழுதிய கதவுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்  கதை பிரபலமானது. உலக மாமியார்களே ஒன்று சேருங்கள் என்ற இவரது சிறுகதை கல்கியில் வெளிவந்து முதல்பரிசை வென்றது. அந்த நாளில் விஸ்வநாதன் என்ற பெயரில் பல எழுத்தாளர்கள் இருந்ததால் 1975 முதல் சாருகேசி என்ற புனைப்பெயரை வைத்துக்கொண்டார். 
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இசை குறித்த ஆர்வம் மிக்கவர்களாக இருப்பது தற்போது காணக்கிடைப்பது அரிது என்ற நிலையில் சாருகேசி மிகுந்த இசைஞானத்தோடு இளம் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் அவர்களது நிறை குறைகளை புன்முறுவலோடு சுட்டிக்காட்டுவதிலும் தேர்ந்தவராக இருந்தார். 
ஒவ்வொரு டிசம்பரிலும் பத்திரிகையில் வெளியாகும் இசை குறித்த இவரது கட்டுரைகள் பெரும் கவனம் பெற்றன. 28 இளம் கலைஞர்களைச் சந்தித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் இயல் இசை நாடகம் என்ற பெயரிலேயே நூலாக வெளிவந்தது. 
இலக்கியம், இசை விமர்சனப் பணிகள் தவிர, புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அவ்வகையில் புத்தக நண்பர்கள் சங்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியமானது.  சாருகேசி 1980-களில் சமூக ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர் என பல பிரபலங்களை பேட்டிகண்டு கல்கியில் எழுதியுள்ளார்.  
மறைந்த சாருகேசியின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  தொடர்புக்கு: 044-24995875.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com