சில நிமிட இடைவெளியில் மீண்டும் பேட்டி கொடுத்தது ஏன் மிஸ்டர் ரஜினிகாந்த்? ஏதாவது தப்பா பேசிட்டீங்களா? 

அரசியலில் நுழைவேன் என்று அவ்வப்போது கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்தப் படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: அரசியலில் நுழைவேன் என்று அவ்வப்போது கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்தப் படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று கே. பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

விழாவில் உற்சாகமாகப் பேசிவிட்டு வீட்டுக்கு வந்து அளித்த பேட்டி என்பதால், அவரது பேச்சின் தொனியும் சற்று உற்சாகமாகவே இருந்தது. சற்று ஸ்டைலாகவும் பேசினார்.

அந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த்திடம், பாஜக தலைவராக நீங்கள் வரவுள்ளீர்கள் என செய்திகள் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். (சரியான நேரத்தில் கேட்கப்பட்ட மிகச் சரியான கேள்வி)

இதற்கு மிக அழுத்தம் திருத்தமான பதிலை ரஜினி பதிவு செய்தார்.  என்னை பாரதிய ஜனதா உறுப்பினராக நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. திருவள்ளுவருக்கு காவி நிறத்தை பூசியது போல் எனக்கும் காவி பூச முயற்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் மாட்டமாட்டேன் என்று கூறி அவரது ஸ்டைலில் வாய் விட்டுச் சிரித்தார்.

திருவள்ளுவருக்கும் எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. ஆனால் இருவருமே தப்பிவிடுவோம் என்று மீண்டும் தனது கருத்தை உறுதிப்படுத்தினார்.

பாஜகவில் இணைவது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உங்களிடம் பேசி வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்த கேள்விக்கு, பாஜகவில் இருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. யாரும் என்னை சந்திக்கவில்லை. பாஜகவின் நிறமான காவியை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. ஆனால் நான் சிக்கமாட்டேன். எனக்கு ஒரு போதும் காவிச் சாயம் பூச முடியாது என்று தெளிவாகக் கூறினார்.

பேட்டியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்ட ரஜினிகாந்த், யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். ஊடகங்களில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும், அவர் ஏற்கனவே கொடுத்த பேட்டிதான் என்று நினைத்துக் கொண்டிருக்க, பேசிய கருத்துகள் எல்லாம் புதிதாக இருந்தது.

அதாவது, எனக்கு பாஜக சாயம் பூச ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது போல கூறிய ரஜினி, அடுத்த  முறை பேசும்போது, ஊடகங்களில் அப்படி வெளியாவதாகக் கூறினார். அதுமட்டுமல்ல, எனக்கு பாஜக சாயம் பூசப்பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் கூறினார்.

மேலும் ஒரு கருத்தை பதிவு செய்தார், அதாவது, தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கூறினார்.

சரி, வெற்றிடம் இருப்பதாகவே இருக்கட்டும், முதலில் ஸ்டைலாகப் பேட்டி கொடுத்துவிட்டு, மீண்டும் வந்து தனது பேட்டிக்கே போட்டி பேட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ரஜினி. நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதுபோல என்று பஞ்ச் வசனம் பேசிய ரஜினி, இப்படி ஒரு பேட்டியை கொடுத்து சில நிமிடத்தில் மற்றொரு பேட்டி கொடுக்க என்ன காரணம்?

முதல் பேட்டியில் ஏதாவது தவறாக சொல்லி விட்டோம் என்று உணர்ந்தாரா அல்லது உணர்த்தப்பட்டதா?

சாயம், பாஜக என்று சொல்லிவிட்டதை ஊடகங்கள் தலைப்பாக்கிவிடுமே என்று பயந்து, தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்ற மற்றொரு கருத்தை தலைப்பாக்கிச் சென்றிருக்கிறாரா என்ற சந்தேகமும் நமக்குள் எழுகிறது.. மற்றொரு பேட்டியில்தான் ரஜினி இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com