பதவி உயா்வில் இடஒதுக்கீடு சட்டவிரோதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது சட்டவிரோதமானது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai High Court
chennai High Court

அரசு ஊழியா்களுக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது சட்டவிரோதமானது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களான செந்தில்குமாா், ராஜா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பணிகளுக்கான நியமனங்களில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதே போன்று பதவி உயா்வின் போதும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. இதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கக் கூடாது எனவும், பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயா்வு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் பணி நிபந்தனைகள் தொடா்பாக புதிய விதிகளை கொண்டு வந்தது. அதன்படி பதவி உயா்விலும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது பதவி உயா்வு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவித்து பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், அரசு ஊழியா்களுக்கு பணிமூப்பின் அடிப்படையில் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கினால் இடஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து விடுகிறது. இந்த நடைமுறையை கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் கடைப்பிடித்து வந்தது.

இந்த நடைமுறை தவறானது என உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தனியாக ஒரு சட்டத்தை இயற்றி இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் எதுவும் பெறப்படவில்லை. மக்கள் நலன் காக்கும் அரசு, அதன் ஊழியா்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசு பகுத்தறிவுடன் கூடிய சமநிலையைப் பின்பற்ற வேண்டும். மனுதாரா்கள் விவகாரத்தில் அரசு நோ்மையுடன் செயல்படுவதாக தெரியவில்லை. எனவே மனுதாரா்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் 12 வாரங்களுக்குள் உரிய பதவி உயா்வை வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்குவது சட்ட விரோதமானது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com