தமிழா்களின் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்று நிகழ்வு: நாளை மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமா்-சீன அதிபா் சந்திப்பு

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் இம்மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் தமிழகம் வந்து கல்லும் கதை சொல்லும் மாமல்லபுரத்தில் உள்ள அரியவகை கற்சிற்பங்களை பாா்வையிட உள்ளனா்.
தமிழா்களின் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்று நிகழ்வு: நாளை மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமா்-சீன அதிபா் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இம்மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் தமிழகம் வந்து கல்லும் கதை சொல்லும் மாமல்லபுரத்தில் உள்ள அரியவகை கற்சிற்பங்களை பார்வையிட உள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாமல்லபுரத்தின்  சிறப்புகள்: உலகில் எத்தனையோ நாடுகள், எத்தனையோ இடங்கள் சுற்றிப்பார்த்து, ரசிப்பதற்கென்றே  உள்ள நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசி, சுற்றிப் பார்க்கும் இடமாக மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டிருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஏனெனில் மாமல்லபுரம் கற்சிற்பக் கலையின் கருவூலம். தமிழர்களின் தனி அடையாளமாக விளங்கிய கோயில் கட்டடக்கலை உருவான இடமே மாமல்லபுரம். இவற்றின் சிறப்புகளை அறிந்த சர்வதேச இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியக்குழு மாமல்லபுரத்தை  உலக  மரபுச் சின்னம் எனவும் அறிவித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
நான்கு வகை கற்சிற்பங்கள் உள்ள மாமல்லபுரம்: மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்கோயில் என்னும் குடைவரைக்கோயில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கட்டுமானக் கோயில்கள், படைப்புச் சிற்பங்கள் என 4 வகையான சிற்பங்களும் மாமல்லபுரத்தில் இருப்பது தனிச்சிறப்பு. பல்லவ மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சிற்பங்களில் எலிகள் விளையாடுதல், தவம் செய்யும் பூனை, பேன் பார்க்கும் பெண் குரங்கின் குடும்பம், யானைக்கூட்டம், இயற்கைக் காட்சிகள் என ஒவ்வொரு சிற்பமும் மனிதர்களின் சிந்தனைகளைத் தூண்டும் அற்புதம் நிறைந்தது.
ஒரு ஆண் மான் தனது பின் காலால் அதன் மூக்கைத் தொடுவதும், அதை வெட்கத்துடன் கவனிக்கும் பெண் மானும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் தபசு என்ற சிற்பத் தொகுப்பில் இம்மான்களின் அழகை, நாணத்தை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1976-ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த போது பார்த்து ரசித்தார். அது மட்டுமில்லாமல்  அக்கல்மான்களின் சிற்பங்களை நம் நாட்டின் 10 ரூபாய் தாளிலும் அச்சிட்டு மாமல்லபுரத்துக்கு பெருமை சேர்த்தார். 
இப்படியாக ஒவ்வொரு சிற்பமும் பார்த்துப் பார்த்து  ரசிப்பதோடு நின்று விடாமல் அதனருகில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள ஆர்வமூட்டும் இடம் மாமல்லபுரம். இதனால் தான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று வரை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது.


கடந்த 2018-இல் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு: கடந்த 2018 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் சீனாவில்  வுகான் என்ற இடத்தில் சீன அதிபருக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே சந்திப்பு நடந்தது. 
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், இரு நாடுகளின் வளர்ச்சி ஆகியன குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். பிரதமர் மோடியும் அப்போதே அந்நாட்டின் அதிபரை இந்தியாவுக்கு வர வேண்டும் 
என்று அழைப்பு விடுத்திருந்தார். 
சீன அதிபரை அந்நாட்டில் சந்தித்த போதே அடுத்து வரும் சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையே பாரம்பரியம் மிக்கதாக இருக்க வேண்டும்  என்றும் அந்தச் சந்திப்பு நடந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தி இரு நாடுகளையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம், இரு நாடுகளின் நல்லுறவையும் அடுத்த நிலைக்கு நாம் எடுத்துச் செல்வோம் என்று சீன அதிபரும்  கூறியிருந்தார். இச்சூழ்நிலையில்தான் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பும் மாமல்லபுரத்தில் நிகழவிருக்கிறது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யீ அரசு முறைப் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்று அண்மையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பின்னர் எந்தவொரு சூழ்நிலையிலும் பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் சீனா ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 
எனவே பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்து வரும் நிலையில்  இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
உலக நாடுகள் பலவும் இரு நாட்டுத் தலைவர்களும் என்ன பேசப் போகிறார்கள் என்பதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.
பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாராணசியில் இந்தச் சந்திப்பை நடத்துவது என மத்திய அரசு அதிகாரிகள் முதலில் முடிவு செய்திருந்தனர். அதன் பின்னரே மத்திய அரசு மாமல்லபுரத்திற்கு இந்தச் சந்திப்பை மாற்றியிருக்கிறது. 
இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்ய இந்தியாவில் பல முக்கிய நகரங்களும், பாதுகாப்பான இடங்களும் அலசி ஆராயப்பட்டு இறுதியாக மாமல்லபுரமே தேர்வாகி இருக்கிறது. இருவரது சந்திப்பும் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் சந்திப்பாகவே இருக்கும். இரு நாடுகளின் வளர்ச்சி குறித்த முக்கிய ஒப்பந்தகளும் நிறைவேற்றப்படவுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களும் பார்க்கும் இடங்கள்: மாமல்லபுரத்தில் பார்த்து ரசிக்கவும், படம் எடுத்துக் கொள்ளவும் பல கற்சிற்பங்கள் இருந்தாலும் இயற்கை தானாகவே செதுக்கிக் கொண்ட ஒரே கல்லினால் ஆன உருண்டைக்கல், ஒரு சிற்பி தனக்கிருக்கிற அத்தனை திறமைகளையும் கல்லில் வடித்துக் கொட்டிக் குவித்திருக்கும் மிகப் பிரம்மாண்டமான படைப்புச் சிற்பமாகிய அர்ஜுனன் தபசு, மணல் பிரதேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாகக் காட்சியளிக்கும் கடற்கரைக்கோயில், ரதங்களைப் போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிற ஐந்து ரதம் எனப்படும் பஞ்ச பாண்டவர் ரதம், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கும் குடைவரைக் கோயிலான ஆதி வராக மண்டபம், இயற்கைக் காட்சிகளை  கற்சிற்பங்களாகக் காட்சிப்படுத்தியிருக்கும் கிருஷ்ண மண்டபம் உள்ளிட் ட அதிசயங்களை, அற்புதக் கற்சிற்பங்களை இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்தே பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பழைமையைப் புதுப்பிக்கவே இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு: இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கும் இடமான மாமல்லபுரம் குறித்து அங்கு மல்லை தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை நிறுவியவரும், மதிமுக துணைப் பொதுச் செயலருமான மல்லை சத்யா கூறியது:
மாமல்லபுரத்தில் 3 விதமான கட்டடக் கலைகள் உள்ளன. அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் ஆகியன வெட்டுதளி என்ற கட்டடக்கலை வடிவம். கடற்கரைக்கோயில் தட்டுதளி என்ற கலையைச் சேர்ந்தது. இதனுள்ளே  இருக்கும் சிவலிங்கம் 16 பட்டைகளை உடையது. கோயிலின் மேலுள்ள இரு விமானங்களும் வைரத்தை பட்டை தீட்டப் பயன்படும் கற்களால் செய்யப்பட்டவை.
கிருஷ்ண மண்டபம் மலையைக் குடைந்து செய்த குடைவரை சிற்பம்.இது கொடைதளி என்ற வகையைச் சேர்ந்தது. இந்த 3 விதமான சிற்பக்கலைகளும் மாமல்லபுரத்தில் இருக்கிறது.
கற்சிற்பம் ஒன்றில் இந்திய சிங்கம், எகிப்து பிரமிடுகளில் உள்ள ஸ்பிங்ஸ் எனப்படும் சிங்கம், சீனாவின் விலங்கு அடையாளச் சின்னமான டிராகன் மற்றும் ரோம் ராஜ்யத்தின் அடையாளச் சின்னம் ஆகிய 4 விலங்குகளும் ஒரே இடத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ரோம், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள் என்பது புரியும். தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம் ஆகியனவற்றை அறிந்து கொள்ள இந்தியா வந்த சீனத் தத்துவ ஞானி மாமல்லபுரம் மிகப்பெரிய துறைமுகமாகவும், வர்த்தக நகராகவும் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
புத்திதார பல்லவச் சக்கரவர்த்தி என்ற போதி தர்மன் காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்று அங்கு தமிழகத்தின் தற்காப்புக் கலைகள், மருத்துவம், மதம், தொழில் ஆகியனவற்றை சொல்லிக் கொடுத்து விட்டு அங்கிருக்கிற சீனப்பட்டு தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள முயன்றார். ஆனால் அவர் இந்தியா திரும்பவில்லை. அதற்குப் பிறகு சுமார்  3 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே சீனப்பட்டு தொழில் நுட்பம்  காஞ்சிபுரத்துக்கு வந்திருக்கிறது.
சீனத்து அறிஞர் யுவான்சுவாங்  இந்தியா  வந்ததும், போதி தர்மர்  சீனா  சென்றதும் போன்ற பழைமையான உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான பாலமே இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

எழுத்தாளர் கல்கியின் பாராட்டு
சிவகாமியின் சபதத்தை எழுதிய அமரர் கல்கி தனது முன்னுரையில் "கையில் பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இத்தகைய மகேந்திர ஜாலங்களை செய்தார்களோ என்று நினைத்த போது அவர்களைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அந்தச் சிற்பிகளிடம் தோன்றிய பக்தியினால் தலை தானாகவே வணங்கியது' என மாமல்லபுரத்தின் சிற்பிகளையும், சிற்பங்களையும் பெருமையுடன் கூறியிருக்கிறார். 
ஆழ்வார்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பூதத்தாழ்வார் அவதரித்த  பெருமைக்குரிய இடம் மாமல்லபுரம். ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனத்தத்துவ ஞானி மாமல்லபுரம் துறைமுக நகராகவும், வர்த்தக நகராகவும் விளங்கியிருக்கிறது என்று அன்றே குறிப்பிட்டிருக்கிறார். 
தமிழர்களின் பெருமைகளைச் சொல்லும் கற்சிலைகளின் கருவூலமாகவே திகழும் மாமல்லபுரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு  வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு  அதிகாரிகள் என அத்தனை பேருமே மாமல்லபுரத்துக்கு வந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.


மாமல்லபுரம் பெயர்க் காரணம்
செங்கல், மரம், உலோகம் மற்றும் சுதை போன்ற அழியும் பொருள்கள் எதுவும் இல்லாமல் குகைகளைக் குடைந்து கற்பாறைகளிலேயே கோயில்களை அமைத்த பெருமை மகேந்திரவர்ம  பல்லவரையே சேரும். இங்குள்ள சிற்பங்களில் பெரும்பாலானவை நரசிம்ம வர்ம பல்லவர் காலத்தை சேர்ந்தவையாகும். இவரது மற்றொரு பெயரான மாமல்லன் என்பதிலிருந்தே இந்த  ஊர் மாமல்லபுரம் என அழைக்கப்பட்டிருக்கிறது.
பல்லவ வம்சத்து அரசர்களின் தலைநகராகவும், துறைமுக நகராகவும் விளங்கியிருக்கிறது. கிரேக்க மாலுமிகள் முதல் மற்றும் 2-ஆவது நாற்றாண்டுகளிலேயே இங்கு வந்து வர்த்தகம் செய்திருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. புத்தரை வழிபடுபவர்கள் சீன மக்கள் என்பதால் சீன அதிபரை மகிழ்விக்க புத்தர் சிலை ஒன்றும், அதற்கு அருகில் இரு பக்கங்களிலும் இரு யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போன்ற   அழகிய கற்சிற்பங்களும் கடந்த வாரம் கடற்கரைக்கோயில் முன்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com