தமிழ் மொழிக்காக ஜல்லிக்கட்டைவிட பெரிய போராட்டம்: கமல்ஹாசன்

தமிழ் மொழிக்கான போராட்டம்,  ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தைவிட பெரிதாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன்

தமிழ் மொழிக்கான போராட்டம்,  ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தைவிட பெரிதாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாட்டின் அடையாள மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், கமல்ஹாசன் திங்கள்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் தங்கள் மொழியும், கலாசாரமும் என்பதுதான்.
1950-இல் இந்தியா குடியரசானபோது அதே சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.
ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது.
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகளில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்துக்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும், மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.
இந்தியா என்பது  ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு என்று அவர் கூறியுள்ளார். மேலும், சுட்டுரையில் "புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும்போது, மக்களிடம் கலந்தாலோசிக்க  வேண்டும்' என்றும் கமல்ஹாசன்  கேட்டுக் கொண்டுள்ளார்.
வெள்ளை அறிக்கை தேவை: சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
5, 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உள்ளதால் பலர் பாதியிலேயே படிப்பைக் கைவிட்டுவிடுகின்றனர். நானும் 8-ஆம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு குறித்த பதற்றத்தின் காரணமாகத்தான் படிப்பைப் பாதியில் விட்டேன்.
வெளிநாட்டிலிருந்து ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. பழுத்த மரம்தான் கல்லடிபடும் என்றார் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com