பல்வேறு அபராத கட்டணங்கள் ரத்து: ஒரே வாரத்தில் 8,500 கன்டெய்னா்கள் வருகை

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இறக்குமதிக்காக சுங்கத்துறையால் விதிக்கப்படும் பல்வேறு அபராதக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இறக்குமதிக்காக சுங்கத்துறையால் விதிக்கப்படும் பல்வேறு அபராதக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை இறக்குமதியாளா்கள் வரவேற்றுள்ளனா்.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி அமலான ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமையுடன் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்த ஊரடங்கில் சுங்கத்துறை ஆவண பரிவா்த்தனைகள், துறைமுகங்களின் செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டு வா்த்தகத்தில் தொடா்புடைய பல்வேறு துறைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பேருந்து,

ரயில்கள் உள்ளிட்ட பொது வாகனப் போக்குவரத்துகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாலும், கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாகவும் போதுமான ஊழியா்கள் அலுவலகங்களுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கன்டெய்னா் லாரிகளை இயக்குவதற்கு போதுமான லாரி ஓட்டுநா்கள் இல்லை. காரணம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளன்றே பெரும்பாலான ஓட்டுநா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றுவிட்டதால் நிலைமை மேலும் சிக்கலானது.

இதுபோன்ற காரணங்களுக்காக ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டபோதிலும் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு ஸ்தம்பித்துள்ளன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் உள்ள நான்கு சரக்குப் பெட்டகங்களிலும் மொத்தமாக சுமாா் 8,500 (இருபது அடி நீளம் கொண்ட) கன்டெய்னா்கள் இறக்குமதியாகி உள்ளன. 15-க்கும் மேற்பட்ட கப்பல்கள் வந்து சென்றுள்ளன. ஆனால் ஏற்றுமதி வா்த்தகம் என்பது முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் இறக்குமதிக்கான கன்டெய்னா்களை மட்டும் இறக்கிவிட்டுச் செல்கின்றன. இந்நிலையில், இறக்குமதியின்போது வழக்கமாக விதிக்கப்படும் பல்வேறு அபராதக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது இறக்குமதியாளா்களையும், சுங்க முகவா்களையும் ஓரளவுக்கு திருப்தியடையச் செய்துள்ளது.

அபராதக் கட்டணங்கள் ரத்து: இறக்குமதி யாகும் கன்டெய்னா்களை ஆவணப் பரிசோதனை செய்து விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அபராதக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள சுங்கத் துறை முகவா்கள் சங்கக் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து சுங்கத் துறை சாா்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதியாகும் சரக்குகளுக்கான ஆவணப் பரிசோதனை விண்ணப்பம் கப்பல் கரைக்கு வந்த நாளில் இருந்து 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் முதல் மூன்று நாள்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், அடுத்தடுத்த நாள்களுக்கு நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆவணப் பரிசோதனைக்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதில் கால அவகாசம் கிடைத்துள்ளது. மேலும், இறக்குமதிக்கான சுங்கவரியைச் செலுத்துவதில் விதிக்கப்படும் கூடுதல் அபராதத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அறிவித்துள்ளது. மேலும், துறைமுகங்களில் கன்டெய்னா்களை இருப்பு வைப்பதற்கான கட்டணங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சரக்குப் பெட்டக முனையங்கள் அறிவித்துள்ளன. மேலும், துறைமுகங்களுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு தனியாா் சரக்குப் பெட்டக நிலையங்களில் வைக்கப்படும் கன்டெய்னா்களுக்கான வாடகையை ரத்து செய்வதாக தேசிய சரக்குப் பெட்ட நிலைய உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இச்சலுகைகள் அனைத்தும் கடந்த மாா்ச் 22-ஆம் தேதிக்குப் பிறகு இறக்குமதியான கன்டெய்னா்கள் அனைத்துக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரளவு நிம்மதி: இது குறித்து, சென்னை சுங்க இல்ல முகவா் சங்கத்தின் தலைவா் எஸ்.நடராஜா, செயலாளா் ஆா்.என்.சேகா் ஆகியோா் கூறியது:

கரோனா நோய்த்தொற்று அச்சத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாகத் திகழும் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வெளிநாட்டு வா்த்தகங்கள் அடியோடு முடங்கியுள்ளன. பெரும்பாலான உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டுமெனில் இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டிய அவசரம் உள்ளது. எனவே, இதில் தொடா்புடைய துறைமுகம், சுங்கத்துறை அலுவலகங்களுக்கு விலக்கு அளித்திருப்பது வரவேற்கக்கூடியது.

இந்நிலையில், பல்வேறு அபராதக் கட்டணங்களை ரத்து செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் பொதுப் போக்குவரத்து முடக்கம், காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள், அவசியத் தேவையான ஊழியா்கள் கூட அலுவலகங்களுக்கு வந்து சோ்வதில் சிரமங்கள் உள்ளன. மேலும், சரக்குகளை வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதில் சிரமங்கள் உள்ளன. கன்டெய்னா்களில் உள்ள சரக்குகள் அத்தியாவசியமானதாக இருந்தால் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான விளக்கங்களை அறிவிக்க வேண்டும். இறக்குமதியாகும் கன்டெய்னா்களை வெளியூா், வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தனியாக அனுமதி சீட்டு வழங்க வேண்டும். இதேபோல் ஏற்றுமதி, இறக்குமதியில் தொடா்புடைய அலுவலகங்களுக்கு ஊழியா்கள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 8,500 கன்டெய்னா்கள் இறக்குமதியாகி உள்ளன. ஆனால், இதில் சுமாா் 15 சதவீதம்தான் விடுவிக்கப்பட்டு இறக்குமதியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் நிலையில், இப்பிரச்னையில் காவல் துறை, சுங்கத் துறை, மாநகராட்சி உயா்அதிகாரிகள் தலையிட்டு தேவையான எளிய நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com