கல்யாணமும் இல்லை - அவியல் கூட்டும் இல்லை: கத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

கல்யாணமும் இல்லை - அவியல் கூட்டும் இல்லை: கத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

கத்தரிக்காய் கடும் விலைவீழ்ச்சி அடைந்துள்ளதால் நெல்லை விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கத்தரிக்காய் கடும் விலைவீழ்ச்சி அடைந்துள்ளதால் நெல்லை விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் இம் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும் மக்கள் காய்கனிகளை மொத்தமாக வாங்கும் நிலை ஏற்பட்டதால் விலை உச்சத்தைத் தொட்டது.  கத்தரி, தக்காளி, தேங்காய் உள்ளிட்டவை இருமடங்கு விலை உயர்ந்தன. ஆனால், விளைச்சல் அதிகம் மற்றும் வேளாண் பொருள்களை வாகனங்களில் எடுத்து வர கெடுபிடிகள் குறைக்கப்பட்டுள்ளதால் காய்கனிகள் விலை குறைந்துள்ளது.

கத்தரி விலை வீழ்ச்சி: திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், சிவந்திப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில், குருவிகுளம், ஆலங்குளம் சுற்றுவட்டாரத்திலும் கத்தரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்துள்ளதால் கத்தரிக்காய் மகசூல் நன்றாக உள்ளது. கத்தரிக்காய் அறுவடை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இப்போது சந்தைகள் பரவலாக்கப்பட்டுள்ளதாலும், காய்கனிகளின் தேவைக்கு அதிகமாக வரத்து இருப்பதாலும் கத்தரிக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையான கத்தரிக்காயின் விலை ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.20 ஆக குறைந்துள்ளது. மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.13 முதல் ரூ.15 வரைக்கு மட்டுமே வாங்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதுகுறித்து மானூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், மானூர், பள்ளமடை சுற்றுவட்டார பகுதி தோட்டங்களில் பயிரிடப்படும் கத்தரி, தக்காளி ஆகியவை திருநெல்வேலி நயினார்குளம் மொத்த மார்க்கெட் மூலமாக விற்பனைக்கு அனுப்புவோம். 

வழக்கமாக பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் விழாக்களும், சுபமுகூர்த்த நாள்களும் அதிகமிருக்கும். அதனால் காய்கனிகளின் தேவை மிகவும் அதிகரிக்கும். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சுபநிகழ்ச்சிகளில் கூட்டு வகைகளில் அவியல் கட்டாயம் இடம்பெறும். இதற்கு கத்தரிக்காயின் தேவை மிகவும் அதிகம். ஆகவே, அதனைக் கணக்கிட்டு பல விவசாயிகள் பயிரிடுகிறார்கள். நிகழாண்டில் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, கோயில் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தவும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உணவு விடுதிகளும் முடங்கியுள்ளதால் வீடுகளுக்கு மட்டுமே காய்கனிகள் வாங்கப்படுகின்றன. அதனால் தேவைக்கு அதிகமாக காய்கனி வரத்து உள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தாலும், அதற்கேற்ப விலை இல்லை. இதனால் கை நஷ்டம் இல்லாமல் தப்பித்தாலே போதும் என்ற மனநிலையில் உள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com