நிதிப்பகிர்விற்குப் பின்னரும் மாநில அரசு வருவாய்ப் பற்றாக் குறையையே சந்திக்கும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பதினைந்தாவது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இவ்வறிக்கை ஏற்றுக்கொண்டதையே இது குறிக்கும். எனினும், மத்திய அரசின் ‘நடவடிக்கை அறிக்கையில்’, நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக, 74,340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் இம்மானியத்திற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தும்.