நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உஜ்வாலா இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்தால் உண்மையான பலன்

உஜ்வாலா இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்தால்தான் முழுமையான பலன் மக்களுக்குக்..

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 10:39 am

ஜி.சுந்தரராஜன்

உஜ்வாலா இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்தால்தான் முழுமையான பலன் மக்களுக்குக் கிடைக்கும், இல்லையென்றால் தவறுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 01-05-2016 தொடங்கி கடந்த செப்டம்பர் 2019 ஆம் ஆண்டுவரை இந்தியா முழுவதும் 8,03,39,993 இலவச எரிவாயு இணைப்புகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான  IOCL, HPCL & BPCL மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 32,43,190 இலவச உஜ்வாலா இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்து வருவதால் மத்திய அரசாங்கம் இந்த உஜ்வாலா வாடிக்கையாளர்கள் 14.2Kg இணைப்பு பெற்ற அனைவருக்கும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு தலா ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் எனவும், அதேபோல் இந்த உஜ்வாலா திட்டத்தில் 5kg சிலிண்டர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த மூன்று மாதத்தில் மொத்தம் 8 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான காலக்கெடு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை மட்டும் என நிர்ணயித்துள்ளது.
 
ஏப்ரல் மாத சிலிண்டர்  தொகையை இலவசமாக அனைவரது உஜ்வாலா வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும். வரவு வைக்கப்பட்ட தொகை சம்பந்தமான தகவல்  எண்ணெய் நிறுவனத்திலிருந்து குறுந்தகவலாக அனைத்து வாடிக்கையாளர் செல்போனுக்கு சென்றுவிடும். வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதை உறுதி செய்து,  அதன்பின் வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து, பில்லில் வரும் முழு தொகையைக் கொடுத்து சிலிண்டர் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் அடுத்த மே மாத முதல் வாரத்தில் ஏப்ரல் மாதம் சிலிண்டர் வாங்கிய உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அந்த மாதத்திற்கான (மே மாதம்) சிலிண்டர் இலவச முன்பணத் தொகை வரவு வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளர்கள் அதை உறுதி செய்து, அந்த மாதம் பதிவு செய்து இரண்டாவது சிலிண்டரை பில் தொகையைக் கொடுத்துப்  பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் மூன்றாவது மாதமாகிய ஜூன் மாதத்திற்கும் அதே நடைமுறையே தொடர்ந்து இந்த இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் முடிவு பெறும்.

இந்த இலவச மாற்று சிலிண்டர் ஒரு மாதத்தில் ஒரு சிலிண்டருக்கு மட்டுமே பொருந்தும். ஏப்ரல் மாதம் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு அந்த வாடிக்கையாளர் அந்த மாதத்தில் சிலிண்டர் எடுக்கவில்லை என்றால் அவருக்கு அடுத்த மாத சிலிண்டர் முன்பண தொகை வராது. இந்த செயல் திட்ட அடிப்படையில் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போனில் IVRS /SMS, வாட்ஸ்அப் அல்லது மொபைல் ஆப் மூலமாகப் பதிவு செய்து இந்த இலவச சிலிண்டரை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும். இந்த உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயனாளிகளுக்கு இரண்டாவது சிலிண்டர் வேண்டுமெனில் அவர்கள் பணத்தைச் செலுத்தி இரண்டாவது சிலிண்டர் இணைப்பாக பெற்றுக் கொள்ளலாம் எனும் நடைமுறை இருந்து வந்தது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் 99% பயனாளிகளிடம் தற்போதுவரை ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு தெரிவித்தது: 

இந்த உஜ்வாலா பயனாளிகள் ஒரு சிலிண்டரை சராசரியாக 3 மாதம் குறையாமல் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கான கடந்த மாதங்களில் இந்த வாடிக்கையாளர்களுக்கான விற்பனை பட்டியல் மற்றும் விற்பனை சதவிகிதம் எவ்வளவு என்பது அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மாதம் ஒரு இலவச சிலிண்டர் என அறிவித்து அதையும் பிரதி மாதம் சிலிண்டர் வாங்கினால் மட்டுமே அடுத்தடுத்த மாதங்களுக்கான இலவச சிலிண்டர் முன்பண தொகை வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது பல குளறுபடிகளை உருவாக்கி உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டர் மூன்று மாதம் வரை பயன்பாட்டிற்கு வருகிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதம் ஒரு சிலிண்டர் கட்டாயம் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டுமென அந்தந்த எண்ணெய் நிறுவனங்கள், கேஸ் வினியோகஸ்தர்களை நிர்ப்பந்தம் செய்வதால் வினியோகஸ்தர்களும் இந்த உஜ்வாலா வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த மாதம் சிலிண்டர் வாங்கினால் மட்டுமே அடுத்தடுத்த மாதங்களுக்கு உங்களுக்கு இலவச சிலிண்டர் முன்பணம் வருமென வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களிடம் காலி சிலிண்டர் இல்லாத சூழ்நிலையே எங்கும் உள்ளது. அரசாங்கத்தின் தவறான காலக்கெடு நிர்ணயம் செய்ததாலும் எண்ணெய் நிறுவனங்கள் வினியோகஸ்தர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியாலும் அந்த சிலிண்டரை எப்படியாவது வாங்கி தங்களது உபயோகத்திற்குப் பயன்படுத்தாமல் அதை வாங்கி வேறு நபர்களுக்குக் கொடுத்துவிடுவது அல்லது வணிக பயன்பாட்டிற்காகக் கொடுப்பது போன்ற தவறுகள் அரசாங்கம் நிர்ணயம் செய்த இந்த  காலக்கெடுவால் நடைபெறும். ஆகவே அரசாங்கம் மூன்று இலவச சிலிண்டர்களுக்கான காலக்கெடு மூன்று மாதம் என்பதை ரத்து செய்து இந்த நடப்பு ஆண்டு வரை இந்த மூன்று சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என மாற்றி அறிவித்தால் மட்டுமே பயனாளிகளுக்கு உண்மையான பலன் இருக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் இதில் மிகப்பெரிய தவறுகள் நடக்காது என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கும். காலக்கெடு நீட்டிப்பை உஜ்வாலா வாடிக்கையாளர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர் என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.