6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:10 pm

DIN

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60 நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அரசிதழில் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் அறிக்கை வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும்கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

பொதுமுடக்க காலத்தில் இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் குறிப்பாக தமிழக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின், 8 ஆவது அட்டவணையில் உள்ள நாட்டில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் வரைவு சட்டத்தை மொழிபெயர்க்கவேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்தை கூற வரும்  ஆகஸ்ட் 11-ஆம் தேதி கடைசி நாளென்று உத்தரவிட்டது. ஆனால், நாட்டில் அதிகமானோர் பேசும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை மத்திய அரசு மொழி பெயர்க்கவில்லை. 

அதிக நுட்பமான கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ள இந்த வரைவு சட்டத்திருத்தம் குறித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் இந்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் இயலாது. எனவே, கருத்து தெரிவிக்கும் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும். வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும். மேலும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு சட்ட அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை எதிர்காலத்தில் நீக்கக்கூடியது.  எனவே, இந்த சட்ட வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும்வரை தடை விதிக்க வேண்டும். இந்த சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பொதுவான இணையதளத்தில் மத்திய அரசு வெளியிடவில்லை.

உரிமம் கோரும் தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே இந்த சட்டத்திருத்த அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலும், கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்திலும் வெளியிட உத்தரவிட வேண்டும். பொதுமக்கள் அவற்றை படித்து புரிந்து கொண்டு, அரசுக்கு கருத்து தெரிவிக்க வழிவகை செய்யவேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த சட்டவரைவு அறிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 

ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்பட்டால், மனுதாரர் எப்போது வேண்டுமானாலும் இந்த உயர்நீதிமன்றத்தை நாடலாம். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்தில் இந்த சட்டதிருத்த வரைவை வெளியிட வேண்டும் என மனுதாரர்  கோருவதால், தமிழக அரசை இந்த வழக்கில் எதிர் மனுதாரரார தாமாக முன்வந்து சேர்த்து உத்தரவிட்டனர். இந்த சட்டதிருத்த வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களுடன் மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.