சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தேர்தல்: அதிமுக வெற்றி
சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.


சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் குலுக்கல் முறையில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் இருந்தன.
இந்நிலையில், கடந்த 2020, ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் டிச.4-ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி அறிவித்தார்.
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த டிச.4-ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி சிவகங்கை வந்தார்.
இதன் காரணமாக,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் டிச. 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கரனும், திமுக சார்பில் செந்தில் குமாரும் போட்டியிட்டனர்.
தொடர்ந்து, தேர்தலில் பங்கேற்பதற்காக அதிமுக, திமுக உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்ற கூட்டரங்குக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.
சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி முன்னிலையில் மறைமுக வாக்குப் பதிவு நடைப்பெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியாக வாக்களித்தனர்.
அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் இரு கட்சி கூட்டணியினரும் தலா 8 வாக்குகள் பெற்று சம பலத்தில் இருந்தனர்.
இதனால், அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்தின் பேரில் குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, வேட்பாளர்கள் இருவரது பெயரும் சீட்டில் எழுதப்பட்டு குலுக்கப்பட்டது.
அதில், அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் பெயர் இடம் பெற்றது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக பொன்மணி பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி அறிவித்தார்.
மேலும், துணைத் தலைவர் தேர்தல் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...