டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

யானைக்கவுனி கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

News image
யானைகவுனி கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு
Updated On :11 டிசம்பர் 2020, 11:06 am

DIN

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. யானைக்கவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது. துப்பாக்கி-2 , கார்-2 மற்றும் இருசக்கர வாகனம்-1 பறிமுதல் செய்யப்பட்டன.

யானைக்கவுனி பகுதியில் வசித்து வந்த தலி சந்த், மனைவி புஸ்பாபாய் மற்றும் மகன் சித்தல்குமார் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், யானைகவுனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கூடுதல் ஆணையாளர் ஏ.அருண், மேற்பார்வையில், வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில், உதவி ஆணையாளர்கள் என்.பாலகிருஷ்ணபிரபு (பூக்கடை சரகம்), எஸ்.லஷ்மணன் (இராயப்பேட்டை சரகம்), ராஜபால் (மிதக்கும் துறைமுகம் சரகம்), ஜுலியஸ் சீசர் (வண்ணாரபேப்டடை சரகம்). காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து வந்தனர்.

கொல்லப்பட்ட சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலா, அவரின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் மற்றும் சில நபர்கள் சேர்ந்து மேற்படி கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டனர். அதன்பேரில், காசிமேடு காவல் ஆய்வாளர் திரு.ஜவகர் தலைமையிலான தனிப்படையினர் எதிரிகளை தேடி புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று சென்னையில், சிசிடிவி பதிவில் கிடைத்த காரின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டு, சோலாப்பூர் மாவட்ட தனிப்படையினருடன் இணைந்து 13.11.2020 அன்று அங்கு எதிரிகள் சம்பவத்தின்போது பயன்படுத்தி தப்பிச்சென்ற அதே காரை துரத்திச் சென்று பிடித்து, எதிரிகள் கைலாஷ் (ஜெயமாலாவின் சகோதரர்) மற்றும் அவருடன் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த இரவீந்தரநாத் கர் மற்றும் விஜய் உத்தம்காம்லே ஆகியோர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் மேற்படி கொலையைச் செய்ததை ஒப்பு கொண்டதன் அடிப்படையில் 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய 1 துப்பாக்கி, UP 16 AH 8340 பதிவு எண் கொண்ட கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும், மேற்படி கொலையில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளான ஜெயமாலா, விலாஷ் ஜலீந்தர் பாக்ரே (ஜெயமாலாவின் சகோதரர்), ராஜு ஷின்டே மற்றும் ராஜு துபே ஆகியோர் 21.11.2020 அன்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மேலும் 1 துப்பாக்கி, 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

2. கோயம்பேடு மார்கெட்டில் பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் 600க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்து குழந்தையை கடத்திய 2 இளஞ்சிறார்கள் உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், கூடுதல் ஆணையாளர் (வடக்கு) ஏ.அருண், மேற்பார்வையில், இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) சி.மகேஸ்வரி வழிகாட்டுதலின் பேரில் அண்ணாநகர் துணை ஆணையாளர் ஜி. ஜவஹர் தலைமையில், கோயம்பேடு சரக உதவி ஆணையாளர், K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர முருகேசன், உதவி ஆய்வாளர்கள் பூபதி ராஜ், சுப்பிரமணி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு குழந்தை கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அக்குழந்தை கடத்தப்பட்ட ரமேஷின் குழந்தை என தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு ரமேஷ் மற்றும் அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி குழந்தையை கடத்திய குற்றவாளிகள் பாபு, கணேஷ், செங்குட்டுவன், காயத்ரி மற்றும் அவரது மகன் 17 வயதுடைய இஞ்சிறார் மற்றும் 16 வயதுடைய மற்றொரு இளஞ்சிறார் என மொத்தம் 6 நபர்களை கைது செய்தனர். 
விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி செங்குட்டுவன் அவருக்கு தெரிந்த அபிநயா என்ற பெண்ணுக்கு 8 வருடங்களாக குழந்தையில்லாததால், அவர்களுக்கு மேற்படி குழந்தையை ரூ.25 லட்சத்திற்கு விற்பதற்காக மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து கடத்திச் சென்றதும், அபிநயா குழந்தையின் ஆவணங்கள் மற்றும் பெற்றோர் சம்மதத்துடன்தான் குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறியதன்பேரில், செங்குட்டுவன் கடத்திய குழந்தையை அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிறுத்தத்தில் வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.

3 . கொலை வழக்கில் 20 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது.

வளசரவாக்கத்தில் கடந்த 1999 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மணி, வினித், ஆனந்த் 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் இவர்கள் மூவர் மீதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வி.அமுதா தலைமையில், உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, கடந்த 20 வருடங்களாக தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

4. எம்கேபி நகர் பகுதியில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட தலைமறைவு குற்றப்பின்னணி நபர் கைது. 1 கைதுப்பாக்கி, 4 தோட்டக்கள், 6 வெடிகுண்டுகள், 2 கத்திகள் பறிமுதல்.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.