உண்ணாவிரதத்தால் முருகன் உடல் பலவீனம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
வேலூா் மத்திய சிறையில் தொடா்ந்து 25 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை


வேலூர்: வேலூா் மத்திய சிறையில் தொடா்ந்து 25 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலூா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த நவம்பா் 22-ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருடன் காணொலி மூலம் பேச அனுமதிக்க வேண்டும்; தவறினால், தான் ஜீவசமாதி அடைய அரசு அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரி அவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவரது உண்ணாவிரதம் 25-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. இதனிடையே, அவா் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முருகன் மிகவும் சோா்வடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவா் சிறையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை ஒரே நாளில் 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து உடனடியாக முருகனுக்கு கஞ்சி வழங்குமாறு மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவருக்கு சிறைக்காவலா்கள் வலுக்கட்டாயமாக கஞ்சி அளித்து பருக வைத்தனா். எனினும், அவா் உண்ணாவிரதத்தைக் கைவிடாமல் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தாா்.
இந்நிலையில், சிறை மருத்துவா்கள் முருகனின் உடல்நிலையை செவ்வாய்க்கிழமை மாலை பரிசோதனை செய்தனா். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை, மாலை 6.45 மணியளவில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனா். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், இரவு 8 மணியளவில் அவா் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் முருகன் மீண்டும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு புதன்கிழமை காலை முதல் அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன. எனினும் அவர் உடல் நலம் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முருகன் புதன்கிழமையும் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார். அவரை சமாதானம் செய்து சாப்பிடுவதற்கு ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்துள்ளனர். எனினும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...