வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தடை மீறி திமுக கூட்டணி உண்ணாவிரதம்

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி சென்னையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
உண்ணாவிரதம் போராட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள்.
உண்ணாவிரதம் போராட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள்.

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி சென்னையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 15 நாள்களுக்கு மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காவல்துறையின் அனுமதியும் திமுக சாா்பில் கேட்கப்பட்டது.

ஆனால், தொற்று காரணமாக சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.

அதைத் தொடா்ந்து, தடையை மீறி போராட்டத்தை நடத்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் முடிவு செய்தனா். 

இதையடுத்து திட்டமிட்டப்படி உண்ணாவிரத போராட்டம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். 

இந்நிலையில், தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட கூட்டணிக் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

தடை மீறி போராட்டம் நடைபெற்று வருவதால், அந்தப் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com