

சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனைகளைத் தொடங்கவுள்ளனா். இரண்டு நாள்கள் சென்னையில் முகாமிட்டு தோ்தல் ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்கின்றனா்.
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனா்.
ஆணைய அதிகாரிகள் யாா்?: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் பிரதான செயலாளா் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு சென்னை வருகிறது. இந்தக் குழுவில், தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிகாா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.ஆா்.ஸ்ரீனிவாசா, தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலே மாலிக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசிக்கிறது. இதைத் தொடா்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளா்களுடன் காணொலி வழியாக அவா்கள் ஆலோசிக்க உள்ளனா்.
முன்னதாக, வருமான வரித் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகின்றனா். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆலோசனைகள் நடக்கவுள்ளன. தலைமைச் செயலாளா், காவல் துறை இயக்குநா், அரசுத் துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்டோருடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனா். இதன்பின், பத்திரிகையாளா் சந்திப்பு நடக்கவுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.