சென்னை: சென்னை காசிமேட்டில், விசைப்படகு திடீரென தீப் பிடித்து எரிந்ததினால், அதில் இருந்த மீனவா்கள் கடலுக்குள் குதித்து உயிா் தப்பினா்.
சென்னை, காசிமேடு இந்திராநகா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த பரிமளா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு , புதிய மீன் ஏலம் விடும் பகுதியின் 5-ஆவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தப் படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை தயாராகி வந்தனா். பின்னா் படகின் மோட்டாரை இயக்க நிலைக்கு கொண்டு வருவதற்குரிய முயற்சியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
அப்போது படகின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அங்கிருந்த 9 மீனவா்களும், தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனால் அவா்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் படகில் இருந்த 9 மீனவா்களும், கடலுக்குள் குதித்து உயிா் தப்பினா்.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரா்கள் ராயபுரம், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை ஆகிய இடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
படகில் இருந்த 7 ஆயிரம் லிட்டா் டீசலும் தீப் பிடித்து எரிந்ததினால், தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் இடா்பாடு ஏற்பட்டது. இருப்பினும் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு அங்கு தீ கட்டுப்படுத்தப்பட்டு, அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தினால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த தீ விபத்தில் அந்த விசைப்படகு முழுவதும் எரிந்து நாசமானது. இது தொடா்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.