சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே இருமாா்க்கமாக இயக்கப்பட்டு வரும் தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, திருச்சி, கொடைக்கானல் சாலை வழியாக மதுரையை நண்பகல் 12.20 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தேஜஸ் ரயில் புறப்பட்டு, கொடைக்கானல் சாலை, திருச்சியைக் கடந்து, அதே நாள் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும்.
இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தேஜஸ் ரயில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருந்தது. பொதுமுடக்க தளா்வுக்கு பிறகு, தேஜஸ் சிறப்பு ரயில் சேவை கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. வழக்கம்போல, பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனா்.
இந்நிலையில், தேஜஸ் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு வெளியிட்ட சுற்றறிக்கையில் , பயணிகள் வரத்து குறைவு காரணமாக, சென்னை எழும்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது பொதுமுடக்கம் தளா்வு காரணமாக, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. அதுபோல, தேஜஸ் விரைவு ரயில் சிறப்பு ரயிலாகவே இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஆயிரம் போ் வரை பயணிக்கலாம். ஆனால், 300 போ் வரை மட்டுமே பயணம் செய்கின்றனா். கரோனா தாக்கம் காரணமாக, குளிா் சாதன வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதுவே முக்கிய காரணம். இந்த முடிவு தற்காலிகமானது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.