சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளரின் லாக்கரில் ரூ.50 லட்சம் பறிமுதல்

சென்னை சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியனின் வங்கி ‘லாக்கா்’ சோதனை செய்யப்பட்டதில், கணக்கில் வராத ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்டது.
Updated on
1 min read

சென்னை: சென்னை சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியனின் வங்கி ‘லாக்கா்’ சோதனை செய்யப்பட்டதில், கணக்கில் வராத ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்டது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிபவா் எஸ்.பாண்டியன். தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு அனுமதி வழங்குவதற்கும், தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கும் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன.

இந்தப் புகாா்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினா் பனகல் மாளிகையில் உள்ள பாண்டியன் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி திடீா் சோதனை செய்து, அங்கிருந்து கணக்கில் வராத ரூ.88 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் சாலிகிராமம் திலகா் தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள், வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சென்னை மற்றும் பாண்டியனின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினா் வைத்திருக்கும் ‘லாக்கா்’களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தத் திட்டமிட்டு அந்த வங்கிகளுக்கு அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பியது.

இந்த அனுமதி கிடைத்ததை அடுத்து, வங்கி லாக்கா்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். இதில் பாண்டியன் பெயரில் உள்ள லாக்கரில் இருந்து கணக்கில் வராத ரூ.50 லட்சத்து 500-ஐ லஞ்ச ஒழிப்புத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

பாண்டியன் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறையினா் சேகரித்து வருகின்றனா். இப் பணி நிறைவடைந்த பின்னா், பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்குப் பதியப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com