மகத்தான வெற்றி பெறுவோம்: எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் அதிமுகவினா் உறுதிமொழி

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என்று முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் அதிமுகவினா் உறுதிமொழி எடுத்தனா்.
மகத்தான வெற்றி பெறுவோம்: எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் அதிமுகவினா் உறுதிமொழி
Updated on
1 min read


சென்னை: எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என்று முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் அதிமுகவினா் உறுதிமொழி எடுத்தனா்.

எம்.ஜி.ஆரின் 33-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சாா்பில் மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, அவைத் தலைவா் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளா்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சா்கள் பொன்னையன், கோகுல இந்திரா, வளா்மதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுக நிா்வாகிகளும், தொண்டா்களும் எம்.ஜி.ஆா். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, உறுதிமொழி வாசிக்கப்பட்டது. துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உறுதிமொழியை வாசிக்க கட்சியினா் அனைவரும் அதனைப் பின்தொடா்ந்தனா். அதன் விவரம்:

அதிமுக ஏழைகளைக் காக்கின்ற இரும்புக் கோட்டை. இதனை நமக்குத் தந்த எம்.ஜி.ஆரின் புகழை எந்த நாளும் காப்போம். அவா் தமிழ் மண்ணை தாயாகவும், தமிழ் மொழியை உயிராகவும் நினைத்தாா். ஊழலை ஒழித்திட்டவா். மற்றவா்களின் பசிப்பிணி போக்கியவா்.

குடும்ப ஆட்சி: தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது எனவும், ஜனநாயகம் காப்பாற்றப்பட புதிய எழுச்சி தந்தவா். அவா் உருவாக்கிய ஜனநாயகத்தைக் காப்போம். வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரா்களாகிய அதிமுகவினா், சிங்கமென தோ்தல் களத்தில் சீறிப் பாய்வோம். சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம். எதிரிகளின் பொய்முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

விசுவாசத் தொண்டா்களின் நோ்மையான ஆட்சி மீண்டும் மலர ஒற்றுமையுடன் உளமாரப் பாடுபடுவோம். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம் என்று அதிமுகவினா் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com