புதுச்சேரி துணை நிலை ஆளுநரைக் கண்டித்து திருநள்ளாற்றில் கடையடைப்பு, சாலை மறியல்

புதுச்சேரி  துணை நிலை ஆளுநரைக் கண்டித்து திருநள்ளாற்றில் சனிக்கிழமை கடையடைப்பு செய்து வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரைக் கண்டித்து திருநள்ளாற்றில் கடையடைப்பு, சாலை மறியல்
Updated on
1 min read

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கைவிட்டதால், புதுச்சேரி  துணை நிலை ஆளுநரைக் கண்டித்து திருநள்ளாற்றில் சனிக்கிழமை கடையடைப்பு செய்து வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 27-ஆம் தேதி காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. கரோனா பரவலைக் காரணம் காட்டி பக்தர்கள் வருகை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நெறிமுறைகளை வகுத்து அறிவித்தது. இணையவழி பதிவு செய்தோர் மட்டும் வரவேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை  முறையாக கோயில் பகுதியில் பின்பற்றப்படவேண்டு என தெரிவித்திருந்தது.

பக்தர்களின்றி சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் வழக்குத் தொடுத்த நிலையில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் விழாவை நடத்தலாம் என நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

இதனிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, திருநள்ளாறு வருவோர் கண்டிப்பாக கரோனா இல்லை என்கிற நெகட்டிவ் சான்றிதழ் 48 மணி நேரத்துக்கு முன்பு பெற்றிருக்கவேண்டும் என உத்தரவிட்டார். இதனால் பதிவு செய்த பக்தர்களே பெரும்பான்மையினர் வருவதற்கு வாய்ப்பிருக்காது, தேவையின்றி சனிப்பெயர்ச்சி விழாவில் ஆளுநர் தலையிட்டுச் சீர்குலைத்துவிட்டதாக அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட வணிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆளுநர் தமது முடிவை மறுபரிசீலனை செய்யாததைக் கண்டித்து திருநள்ளாறு வணிகர்கள் சனிக்கிழமை கடையடைப்பு செய்தனர். தேரடி அருகே வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளுடன் காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், சிவாச்சாரியார்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாவட்ட துணை ஆட்சியரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான எம்.ஆதர்ஷ், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார். ஆனால் ஒட்டுமொத்தமாகச் சனிப்பெயர்ச்சி விழாவை ஆளுநர் சீர்குலைத்துவிட்டதாகவும், தமது முடிவை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடருமெனக் கூறி போராட்டத்தை நடத்திவருகின்றனர். திருநள்ளாறு - காரைக்கால் பிரதான சாலைப் பகுதியில் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றுள்ளதால் போக்குவரத்து பாதித்துள்ளது. 

திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை காலை முதல் சுமார் 250 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். மாவட்ட எல்லைகள், ரயில் நிலையத்திலிருந்து வரும் பக்தர்களை காவல்துறையினர் விசாரித்து நிறுத்தி, கரோனா பரிசோதனையை மருத்துவமனைக்குச் சென்று எடுத்துவந்தால்தான் திருநள்ளாற்றுக்கு அனுமதிக்கப்படும் எனக் கூறிவருகின்றனர். இதனால் பல பகுதிகளில் காவல்துறையினருக்கும், பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com