இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வங்கிக் கடன் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்ய விசைத்தறியாளர் சங்கம் வலியுறுத்தல்

விசைத்தறியாளார்களின் வங்கிக் கடன் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாவார்கள் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. 

News image
திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் இரா.வேலுசாமி பேசினார்.
Updated On :26 டிசம்பர் 2020, 10:00 am

DIN

விசைத்தறியாளார்களின் வங்கிக் கடன் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாவார்கள் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. 

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பல்லடம் 63 வேலம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்க மாவட்ட தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார்.  

மாவட்டச் செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 63 வேலம்பாளையம் சங்க தலைவர் பத்மநாபன் வரவேற்றார். இக்கூட்டத்தில் சங்க பொருளாளர் முத்துக்குமாரசாமி, கந்தசாமி, அவிநாசி பாலசுப்பிரமணியம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்படப் பலர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அதில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ளது. இந்த தறிகள் மூலம் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 90 சதவீத விசைத்தறிகள் கூலிக்கு நெசவு செய்யும் அடிப்படையில் இயங்குகின்றன. விசைத்தறியாளர்கள் 6 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி கிடைக்காத காரணத்தினால் வங்கிக் கடன்களை அடைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் தங்களது வீடு மற்றும் விசைத்தறி நிறுவனங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சூலூர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ரூ.65 கோடி கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதனை உடனே செயல்படுத்திட வேண்டும். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மற்றும் தற்போது கரோனாவின் தாக்கம் போன்றவற்றின் காரணமாக விசைத்தறி தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு காரணமாக கடன் நிலுவைக்காக ஏலம், ஜப்தி முதலிய நெருக்கடிகள் அதிகமாக உள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகிறது.

அன்னிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்த சூழலில் தமிழக முதல்வர் அறிவித்தபடி ரூ.65கோடி சிறு,குறு, விசைத்தறியாளர்களின் மூலதன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் எனவே கடன் தள்ளுபடியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தால் விசைத்தறி மின்சார சலுகைகள் பாதிக்கப்படாமல் தொடர வேண்டும். 

சீருடை, இலவச வேட்டி சேலை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யும் வகையில் கூட்டுறவுச் சங்க விசைத்தறி உறுப்பினர்கள் மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும். திருப்பூர், கோவை மாவட்டத்தில் தினமும் உற்பத்தியாகும் 1.25 கோடி மீட்டர் காடா துணியை விற்பனை செய்ய மொத்த ஜவுளி சந்தை அமைத்துத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி பாலாஜி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.