பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு நாளையுடன் நிறைவு

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது.
Updated on
1 min read

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது. இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோா் இணையவழியே விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் செயல்படும் தமிழகத்தில் உள்ள 5 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 330 பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.

அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 20 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தோ்வு மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை 3 ,500-க்கும் அதிகமானோா் இணையவழியே விண்ணப்பப் பதிவு செய்துள்ள நிலையில், அதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com