நடிகர் பிரசன்னா ரூ.13 ஆயிரம் மின்கட்டண பாக்கி வைத்துள்ளார்: அமைச்சர் பி.தங்கமணி

நாமக்கல்: மின்வாரியத்தின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பும் நடிகர் பிரசன்னா 13 ஆயிரம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளார் என அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை  ஆய்வு செய்யும் மின்துறை அமைச்சர் தங்கமணி
நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும் மின்துறை அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: மின்வாரியத்தின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பும் நடிகர் பிரசன்னா 13 ஆயிரம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளார் என அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். கட்டுமானத்தின் தரம் குறித்தும் கட்டடங்களின் நிலை குறித்தும் அவர்கள் விளக்கமாக கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும். கரோனா பொது முடக்கத்தால் சற்று காலதாமதம் ஆகிறது.  அதேபோல் கேங்மேன் பணியிடத்திற்கான தேர்வுகள் முடிவடைந்து தகுதியானவர்கள் பட்டியலும் தயாராக உள்ளது. 

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பணியிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளது. மின்கம்பங்களை பொருத்தவரை தரமான மின்கம்பங்களே பயன்படுத்தப்படுகின்றன. காற்றின் வேகத்தைப் பொறுத்து ஒரு சில கம்பங்கள் சாய நேரிடுகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்தே அனைத்து கம்பங்களும் கொண்டுவரப்படுகின்றன. தரமற்ற கம்பங்கள் என்று யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவில் கம்பங்கள் உள்ளன. மின்சார கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப் படுவதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை. 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மின்கட்டணம் தொடர்பாக சில தவறான கருத்துக்களை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை பொறுத்தவரை ஜனவரி மாதத்திற்கு பின் கணக்கீட்டு பணி நடைபெறவில்லை. கரோனா பொது முடக்கத்தால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தற்போது நான்கு மாதம் ஆகிவிட்டதால் பயன்படுத்திய மொத்த யூனிட்டையும் மின் அளவீடு செய்து இரண்டு மாதங்கள் என்ற வகையில் அதை பிரித்து கட்டணத்தை நிர்ணயிக்கிறோம். நடிகர் பிரசன்னா மின்வாரியம் மீது தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

அவர் நான்கு மாதத்தில் 6, 920 யூனிட் வரை பயன்படுத்தியுள்ளார். இதற்கு ரூ. 42 ஆயிரம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஏற்கனவே ரூ 13 ஆயிரம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளார். இவற்றையெல்லாம் அவரிடம் மின்வாரிய அதிகாரிகள் விளக்கியுள்ளனர். பயன்படுத்திய மொத்த யூனிட் அடிப்படையிலேயே மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பணம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com