எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அன்பழகன் விரைந்து நலம் அடைவார்: மு.க.ஸ்டாலின்

அன்பழகன் விரைந்து நலம் அடைவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2020, 3:30 pm

DIN

அன்பழகன் விரைந்து நலம் அடைவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மற்றும் செயலாக்கத்தின் வாயிலாக, உங்களில் ஒருவனான நான் விடுத்த அன்பு வேண்டுகோளினை ஏற்று, தமிழக மக்களின் பசிப்பிணியாற்றியும் - அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும், அரசியல் - கட்சி, சாதி - மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவியும், எதிர்க்கட்சி எனும் நிலையில் மக்களின் மனங்களில் ஆட்சி செய்து வரும் மாபெரும் இயக்கம் தி.மு.கழகம்!

நாற்பது நாட்கள் நம்முடைய கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், இயக்கத்தின் -ரத்தநாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவரும் களமிறங்கிப் பணியாற்றியதன் காரணமாக, 28 லட்சம் உணவுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு, மக்களின் பசித்துயர் போக்கப்பட்டுள்ளது. 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக்கவசங்கள் – கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 18 லட்சம் உதவி அழைப்புகளை அலைபேசி வாயிலாகப் பெற்று, நமக்கு உதவிடும் எண்ணத்துடன் பதிவுசெய்த 36,100 நல்லோர்கள் - 230 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட மகத்தான இந்தப் பெரும்பணிக்குப் பிறகு; ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்வு காணக்கூடிய கோரிக்கைகள் அடங்கிய 7 லட்சம் மனுக்கள் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளன.

காணொலி வாயிலாக நான் வைத்த கோரிக்கையைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள், பல நாட்கள் 24 மணிநேரமும் கடுமையாக உழைத்து நிறைவேற்றியபோது அவர்களை ஒவ்வொரு நாளும் தொடர்புகொண்டு, “உங்கள் உடல் நிலையைக் கவனித்துக்  கொள்ளுங்கள். கொரோனா நோய்த் தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்துவது என் வழக்கமாக அமைந்திருந்தது. அதில் நான் அதிகம் வலியுறுத்தியது, சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அவர்களிடம்தான்.

“ஒன்றிணைவோம் வா” செயல்பாடுகளுக்காகச் சென்னையின் பல பகுதிகளுக்கு நான் நேரில் சென்று உதவிகள் வழங்கிய நிலையில், தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளில் என்னைச் சிரமப்படுத்தக்கூடாது என்ற கவனத்துடன், தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் ஜெ.அன்பழகன். “நீங்க பாதுகாப்பா இருங்க.. நான் பார்த்துக் கொள்கிறேன். விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்வது வாஞ்சை மிகுந்த அவருடைய வாடிக்கை. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர் என்பதால், அதிக அலைச்சல் கூடாது என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். அவரோ, பாரம்பரியமான கழக ரத்தம் உடலில் பாய்ந்தோடுகின்ற உடன்பிறப்பு.

நமது உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய செயல்வீரராக விளங்கி, மிசா சிறைக்கொடுமைகளை எதிர்கொண்ட பழக்கடை ஜெயராமனின் புதல்வர். தந்தை எட்டடி என்றால், தனயன் பதினாறடி என்ன, அதற்கு மேலும் பாயக்கூடியவர். தலைவர் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்வு உள்ளிட்ட அவரது மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் அதில் அவர் காட்டுகின்ற அக்கறையும், அதனைச் செயல்படுத்துகிற பாங்கும் பிரமிக்க வைக்கும். ஒய்.எம்.சி.ஏ. திடலில் அறிவாலயத்தையே அச்சு பிசகாமல் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியதுபோல விழா மேடை அமைப்பார். கோபாலபுரம் இல்லத் தலைவரின் வரவேற்பறையை பிறந்தநாள் மேடையின் பின்புறம் கொண்டு வந்து வைத்தது போல உருவாக்கிக் காட்டுவார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையா, டெல்லி செங்கோட்டையா, நாடாளுமன்றக் கட்டடமா எதுவாக இருந்தாலும் அதை அப்படியே அழகு மிளிர உருவாக்கியதுபோல மேடை அமைத்து தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதல்களைப் பலமுறை பெற்றவர் ஜெ.அன்பழகன்.

எதையும் மறைக்காமல் இயல்பாகப் பேசக்கூடியவர். உடன்பிறப்புக்குரிய உரிமை அந்தக் குரலில் இருக்கும். அதில் உள்ள செய்தியோ இயக்கத்தின் நலன் கருதியதாக இருக்கும். அதனால்தான் அவரிடம், இயக்கத்தின் நலன் காப்பதுபோல, நீங்கள் இயங்குவதற்கேற்ற வகையில் உடல்நலனைக் காத்திட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன். களத்தில் இறங்கிய போர்வீரனைப் போல,  இலக்கைத் தவிர வேறெதையும் சிந்திக்காமல் செயல்பட்டார். தற்போது, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்பில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அவருடைய உடல்நலன் குறித்து டாக்டர் இளங்குமரனும், கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனும் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். 80 விழுக்காட்டிற்கு மேல் செயற்கை சுவாசம் தேவைப்பட்ட நிலையில், தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சையினால் வெள்ளி காலையில் 45 விழுக்காடு அளவிற்குச் செயற்கை சுவாசம் என்கிற மெலிதான முன்னேற்ற நிலை ஏற்பட்டு, தொடர்ந்து சீரான நிலையில் இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் அயராத உழைப்பும் அக்கறையும் சிகிச்சை முறையும் நிச்சயமாக ஜெ.அன்பழகனை முழுமையாக நலன் பெறச் செய்து, கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து வந்து நம்முடன் முன்புபோல பழகிப் பேசி பணிகளைக் கவனிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புவரை அதே உணர்வு வெளிப்படுவதை சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் காண்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.