பொது முடக்கத்தால் கடன் சுமை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளானதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பொது முடக்கத்தால் கடன் சுமை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

கும்பகோணம்: பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளானதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் எம். ரகுபதி (43). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு மனைவி அமுதா (35), பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சந்தியா (15), எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் சஞ்சய் (13) உள்ளனர்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ரகுபதி ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு அறிவித்த பொது முடக்கம் காரணமாக இரு மாதங்களாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. இதனால், இவருக்கு வருமானமும் முற்றிலும் தடைப்பட்டது. எனவே, வாங்கிய கடனுக்கான மாத வட்டி, வார வட்டி, குழுக்கடன், ஆட்டோவுக்கான மாதத் தவணைக் கடன் ஆகியவற்றைச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

இதன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த இவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரகுபதி எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றினர்.

அதில், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் மாத, வார வட்டி, குழுக் கடன், ஆட்டோவுக்கான இஎம்ஐ கட்ட முடியவில்லை. ரயில் இயக்கப்படாததால் பயணிகள் வருகையின்றி, வருமானமும் இல்லாததால் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். நான் வாங்கிய கடனைக் கேட்டு எனது மனைவியிடம் நெருக்கடி தர வேண்டாம். என் குடும்பத்துக்கு அரசு ஏதாவது நிவாரணம் வழங்கி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com