காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் திறக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி காலை முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீர் திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை காலை கல்லணைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே கல்லணையிலிருந்து முற்பகல் 11 மணி அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கல்லணைக்கு வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து, கல்லணையிலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் 12.50 மணியளவில் டெல்டா பாசனத்துக்காகக் காவிரியில் அமைச்சர்கள் ஆர். காமராஜ் (உணவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை), ஓ.எஸ்.  மணியன் (கைத்தறி மற்றும் துணி நூல் துறை), இரா. துரைக்கண்ணு (வேளாண்மைத் துறை), புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் தண்ணீரைத் திறந்துவிட்டு, மலர் தூவி வணங்கினர். இதையடுத்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்திலும் தண்ணீரைத் திறந்து விட்டனர்.

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com