சென்னையில் பொது முடக்கம்: கண்காணிப்புப் பணியில் டிரோன் கேமரா, ஸ்பீக்கர் - ஏ.கே. விஸ்வநாதன்

முழு பொது முடக்கம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து இன்று காலை முதலே சாலைகளில் நடமாட பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சென்னையில் பொது முடக்கம்: கண்காணிப்புப் பணியில் டிரோன் கேமரா, ஸ்பீக்கர் - ஏ.கே. விஸ்வநாதன்

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையான முழு பொது முடக்கம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து இன்று காலை முதலே சாலைகளில் நடமாட பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சாலைகளில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சென்னை காவல்துறையினர் டிரோன் கேமராக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது குறித்து கண்காணிப்புப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்த காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பொது முடக்கத்தைக் கடுமையாக பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் நிலைமையை கண்காணிப்பதோடு, டிரோன் ஸ்பீக்கர்கள் மூலம் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். ஈ-பாஸ் இல்லாத எந்த வாகனத்தையும் சென்னைக்குள் அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனா். அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்து, மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 15) ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் சில பகுதிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். இதன்படி முழு பொது முடக்கம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 

இதில், சில அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகன உபயோகம் அனுமதி இல்லை.

மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் அனுமதி: அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளைச் சோ்ந்த துறைகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கும். குறிப்பாக மாநிலத்தில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, காவல், வருவாய், மின்சாரம், கருவூலம், ஆவின், உள்ளாட்சி, தொழிலாளா் நலன், உணவு ஆகிய துறைகள் மட்டும் தேவையான பணியாளா்களுடன் செயல்படும். முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோா், நோயாளிகளுக்கு உதவி புரிவோா் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் தொடா்ந்து செயல்படும். அங்கு உணவு இலவசமாக வழங்கப்படும்.

2 மணி வரை கடைகள் இயங்கலாம்: பொது விநியோகக் கடைகள், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உரிய விதிகளுக்கு உள்பட்டு, தனி நபா் இடைவெளியுடன் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்துக்கும், அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை. ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில், முழு பொது முடக்கத்தின் தளா்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் தவிா்த்து, நகரின் உட்பகுதிகளில் 288 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் வெளியில் சுற்றியவா்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com