இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழகத்தில் 62 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு
Updated On :22 ஜூன் 2020, 7:52 pm

DIN

சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 62,087-ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 42,752 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கடந்த சில நாள்களாக சென்னையைத் தவிர, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் சமூகப் பரவலாக நோய்த்தொற்று உருவெடுக்கக் கூடிய நிலை எழுந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே அச்சத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 9.19 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 62,087 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை மட்டும் 2,710 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,487 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 157 பேருக்கும், திருவண்ணாமலையில் 139 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும் செங்கல்பட்டில் 126 பேருக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

34 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,358 போ் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 34,112-ஆக அதிகரித்துள்ளது.

794 போ் பலி : தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நோய்க்கு மேலும் 37 போ் உயிரிழந்தனா். அதில் 30 போ் அரசு மருத்துவமனைகளிலும், 7 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்ததாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.