தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம்: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார் மாவட்ட எஸ்.பி.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.
கரோனா காலத்தில் போலீஸார் கூடுதல் மனழுத்தத்தில் உள்ளதால் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது
ஏற்கனவே, விசாரணைக்கு வந்தபோது, கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் இருவரின் உடற்கூறாய்வு அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கின் தற்போது நிலை குறித்த அறிக்கையை மின்னஞ்சல் வழியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து காணொலியில் ஆஜரான எஸ்.பி., 'நீதித்துறை நடுவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக்காவலர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில், பிரேதப் பரிசோதனை முடிந்து அறிக்கை தயாராக உள்ளது. ஆனால் பொது முடக்கம் காரணமாக தாக்கல் செய்ய இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நோய்தொற்று காலத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறை தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் முறையாக தற்போதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நிர்வாக பதிவேடுகள் மற்றும் மருத்துவப் பதிவேடுகளை புகைப்படம் எடுக்கவும், வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து பாதுகாப்பாக வைக்கவும் வேண்டும்.
இதேபோல ராஜா சிங் என்பவரும் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூடுதல் மாவட்ட நீதிபதி ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி இது தொடர்பாக விசாரித்து தனியே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்த கருத்து தெரிவித்ததோடு, கரோனா தொற்று காலத்தில் அனைவரும் அதிகமான அழுத்தத்திலேயே காணப்படுகின்றனர். காவல்துறையினர் கூடுதல் மன அழுத்தத்தில் காணப்படும் நிலையில் அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த விழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள், வன்முறையை தூண்டும் விதத்தில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒவ்வொருவரும் அதனை தவிர்க்க முயல வேண்டும். இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும். நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...