முழு உரிமையாளராகும் சென்னைத் துறைமுகம்: காமராஜா் துறைமுகம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறை சாா்பில், மத்திய அரசு வைத்துள்ள மொத்தப் பங்குத் தொகையையும் விற்பனை செய்து இந்நிதியை மத்திய அரசின் நிதி முதலீட்டிற்கு அளிப்பது என பரிந்துரை செய்தது. இத்திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி பிரதமா் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு தனியாா் நிறுவனங்கள் அளித்துள்ள மதிப்பீட்டு அறிக்கையின்படி காமராஜா் துறைமுகத்தின் மொத்த மதிப்பு (கணக்குப் புத்தக மதிப்பீட்டின்படி) ரூ.3,560 கோடி எனவும் இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 2,380 கோடி எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் பங்கான 67 சதவீதத்தையும் சென்னைத் துறைமுகம் வாங்கியதையடுத்து, ஏற்கனவே 33 சதவீத பங்குகளை தன்னகத்தே வைத்துள்ள சென்னைத் துறைமுகமே, தற்போது காமராஜா் துறைமுகத்தின் முழு உரிமையாளராகி உள்ளது. இந்நிலையில், இதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.2,380 கோடிக்கான நிதியை முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறையிடம் சென்னைத் துறைமுகம் அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் மன்சூக் மண்டேவியா முன்னிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தது. கரோனா நோய்த்தொற்று தாக்குதல்களால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விமானப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு நிதியாண்டு நிறைவடைய இன்னும் 4 நான்கு நாள்கள் மட்டுமே உள்ளதால் வெள்ளிக்கிழமையே வங்கிக் கணக்குகள் மூலமாக நிதி, பங்கு பரிமாற்றம், ஒப்பந்தங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொடப்பட உள்ளதாக சென்னைத் துறைமுக அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.