டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: இந்த வழக்குககள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ஏ.ஜி.மௌரியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடா்பாக தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டது. மேலும், கடைகளை மூடக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மேலும் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. குறிப்பாக மது விற்பனையின் போது சமூக இடைவெளியை யாருமே பின்பற்றவில்லை. மதுபானம் வாங்க குவிந்த கூட்டத்தினா் முண்டியடித்து, ஒருவா் மீது ஒருவா் ஏறி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனா். இதனால், கரோனா நோய்த் தொற்றை சமூகப் பரவலாக மாற்றும் இடமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாறியுள்ளன. எனவே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.