கிருமிநாசினி தெளிப்பால் பயனில்லை!

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு முறைகள் பலனளிக்காததால் நிபுணத்துவம் வாய்ந்த முறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று 
கிருமிநாசினி தெளிப்பால் பயனில்லை!

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு முறைகள் பலனளிக்காததால் நிபுணத்துவம் வாய்ந்த முறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உயிரி தொழில்நுட்பவியல் துறை நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 170}க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவி மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவில் கரோனா தொற்றை தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் கடந்த மார்ச் 23 முதல் பொதுமுடக்கம் உத்தரவு அமலில் உள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இதன் ஒரு பகுதியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது, அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
மேலும் கரோனா  தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பவர் ஸ்பிரே வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், அதி நவீன சுழல்முறை தெளிப்பு வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
 இதில் லைசால் உள்ளிட்ட கிருமி நாசினிகள் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் கரைக்கப்பட்டு ஸ்பிரேயர் வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் தெளிக்கப்படுகின்றன. 
இதன்படி தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. 
பெரிய வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் தானியங்கி கைத்தெளிப்பான் மூலமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 
இதில் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பேருந்து நிறுத்துமிடங்கள், பிரதான சாலைகள் முதல் குறுகிய சாலைகள், தெருக்கள், உள் தெருக்கள்,  வணிக வளாகங்கள், திரையரங்குகள், காவல்நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  
ஆனால் தற்போது அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வரும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு முறைகளால் கரோனா நோய்த்தொற்றை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. கரோனா தொற்றை நிபுணத்துவம் வாய்ந்த முறையை கையாள்வதால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக அவர்கள் கூறியது:
  கரோனா கிருமியை அழிக்கிறோம் என்ற பெயரில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கிருமி நாசினியால் சாலைகளை கழுவி விடுவது, உயரமான கட்டடங்களின் சுவர்களில் டிரோன் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். இது எவ்வித பலனையும் அளிக்காது. கரோனா தொற்று மனிதர்களின் கைகள் மூலமாகத்தான் பரவுகின்றது. மனிதர்களின் கைகள் படும் இடங்களை கணக்கிட்டு பட்டியல் தயாரித்து அங்கு கிருமி நாசினி மருந்துகளை தெளிப்பதால் மட்டுமே கரோனா  தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.  
அதன்படி பார்த்தால் வீட்டு வாயில் கதவு, கைப்பிடிகள், வீட்டின் முன்பு காலணிகள் வைக்குமிடங்கள், அலுவலக வாயிற் கதவுகள், மாடிப்படிகள், கைப்பிடிகள்,  வாகனங்களின் கதவு கைப்பிடிகள்,  அலுவலக மேஜை இழுப்பறைகள் போன்றவற்றுக்குத்தான் கிருமி நாசினி தேவைப்படுகிறது. 
கரோனா கிருமி சாலையின் மேற்பரப்பிலோ அல்லது சாலையிலோ உயிர் வாழும் தன்மை இல்லாதது. 
ஏதாவது ஒரு பொருளை  சார்ந்தே சில மணி நேரங்கள் உயிர்த்திருக்கும் தன்மை உடையது.  எனவே சாலைகளை கிருமி நாசினியால் கழுவுவது பயனற்றது. 
மேலும் அடுக்கு மாடிக்கட்டங்களில் கிருமி நாசினி தெளிக்கும்போது, தானியங்கி மின் தூக்கிகள், அதன் உள் அறைகள், ஸ்விட்ச்சுகள் போன்றவை தினசரி பலரால் கையாளப்படுவதால் மிக எளிதில் கரோனா வைரஸ் தொற்றை பரப்பும் தன்மை வாய்ந்தவை.  ஆனால் இங்கு கிருமி நாசினி தெளிக்கப்படுவது இல்லை. மேலும்  கோடைக்காலமான தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பயனற்ற கிருமி நாசினி முறையால் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. 
கரோனா கண்டறியப்பட்ட சீனாவின் வூகான் மாகாணத்தில் இதுபோன்ற முறைகள் கையாளப்பட்டது என்றால், சீனா முதன்முறையாக இதுபோன்ற தொற்றை சந்தித்துள்ளது. 
எனவே அவை பரவுவதை கட்டுப்படுத்த என்னவெல்லாம் முயற்சிகள் உண்டோ அவற்றையெல்லாம் செய்து பார்த்தது. பின்னர் இதுபோன்ற கிருமி நாசினி முறைகள் பயனற்றவை என்று தெரிய வந்ததால் அதை நிறுத்தி விட்டு புதிய முறைகளைக் கையாண்டனர். 
எனவே தமிழக அரசும் கிருமி நாசினி மருந்து தெளிப்பு முறையில் நிபுணத்துவத்தை கடைப்பிடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றனர்.   

சரக்கு வாகனங்களில் கவனம் தேவை: பொதுச் சுகாதாரத் துறை முன்னாள் அதிகாரி 
தமிழகத்தின் பொதுச்சுகாதார துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஷேக் உசேன், கரோனா கிருமி ஒழிப்பு குறித்து கூறியது:  
கரோனா தொற்று தற்போது பெரும்பாலும் சந்தைகளில் இருந்தே பரவி வருகிறது. எனவே சந்தைகளுக்கு வரும் சரக்கு வாகனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களில் உள்ள சரக்குகள் காய், கனிகளாக இருந்தாலும், பொருள்களாக இருந்தாலும் அவை பல்வேறு கைகள் பட்ட பின்னரே சந்தைக்கு வருகிறது. 
எனவே தேவைப்படும் பட்சத்தில் சரக்கு வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். சந்தைகளிலும் மனிதர்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் தினசரி இருவேளை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தேர்ந்தெடுத்த முறைகளில் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது உறுதியாக கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com