டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 6 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 6 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

தமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த 1,953 குரூப் 2ஏ பணியிடங்களுக்குத் தேவையான ஊழியர்களை தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தேர்வு நடத்தியது. இத்தேர்வை 5.56 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வின் முடிவு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்போது அரசு பணிகளில் உள்ளனர். இந்த தேர்வு முடிவு வெளியானவுடன், தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், அந்த புகார்கள் எந்த விசாரணையும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தனர். இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த சிவராஜ், விக்னேஷ் ஆகியோர், ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அவர்கள் இருவரும் தலா ரூ. 7.5 லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடியில் புகார் செய்தனர்.  

இதன் அடிப்படையில் குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி அதிகாரிகள், முறைகேடுகளில் தொடர்புடைய தரகர் ஜெயகுமார், டிஎன்பிஎஸ்சி அலுவலக உதவியாளர் ஓம் காந்தன், செம்பியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வடிவு உள்ளிட்ட 47 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 பேருமே அரசு ஊழியர்கள். 

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த வழக்கு தொடர்பாக 51 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கரோனா பொதுமுடக்கம் காரணமாக முடங்கிப் போனது. 

இந்தநிலையில் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கிடப்பில் இருப்பதாக அனைத்து தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. 

இந்நிலையில், கடந்த 15 நாள்களாக சிபிசிஐடி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விசாரணையில் வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் உள்ளபட மேலும் 6 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

வழக்கு கிடப்பில் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், 15 நாள்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com