சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை: சி.விஜயபாஸ்கர்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும்
ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்ட அரங்கில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்புப் பிரிவு செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே..ஏ.பாண்டியன் (சிதம்பரம்), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்), மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன், பதிவாளர் ஆர்.ஞானதேவன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் யு.சண்முகம், துணைவேந்தரின் ஆலோசகர் டாக்டர் என்.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்புப் பிரிவு செயல்பாடு குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: 

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கோவிட்-19 பிரிவு 350 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது. மேலும் கூடுதலாக படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு 1255 பேர் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவை மட்டுமல்லாமல் பிற நோயாளிகளையும் குணப்படுத்தியுள்ளனர். கோவிட் பாசிட்டிவ் உள்ள 221 கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வலுப்படுத்துவதற்காக எம்ஆர்ஐ ஸ்கேன், கேத்லேப் மற்றும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஆணைப்படி அரசு சார்பில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கப்படும் என சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு: சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் பிரிவு, கரோனா சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வின் போது உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், முதன்மை மருத்துவர் (பொறுப்பு) ரவி, குருதி வங்கி மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் டாக்டர் ஜீவா, மகப்பேறு மருத்துவர் இந்திரா ஆகியோர் உடனிருந்தனர். 

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் 50 படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 956 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 303 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கரோனா காலத்திலும் மகப்பேறு சிகிச்சை அதிகளவு மேற்கொள்ளப்பட்டதற்கு மருத்துவர்களைப் பாராட்டுகிறேன். 

கடலூர் மாவட்டத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாவட்ட முதன்மை மருத்துவமனையாகவும், சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் 2-வது மருத்துவ பாதுகாப்பு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் வீடுகளில் தாமே தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் கழிப்பறையுடன் கூடிய தனி அறை இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். கரோனா நோயால் மரணமடைந்தவர்களைத் தகனம் செய்ய அண்ணாமலைநகர் மின்மயானத்தில் கூடுதல் தொகை பெறப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நடராஜர் ஆலயத்தில் அமைச்சர் தரிசனம்: 

முன்னதாக சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் பொதுதீட்சிதர்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானைத் தரிசித்தார். அவருக்குக் கோயில் பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினர்.
=====

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com