மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது: சென்னையில் இருந்து 7 ஆயிரம் பயணம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து சேவை, திங்கள்கிழமை தொடங்கியது.

News image
மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து சேவை, திங்கள்கிழமை தொடங்கியது.
Updated On :7 செப்டம்பர் 2020, 11:12 pm

DIN

சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து சேவை, திங்கள்கிழமை தொடங்கியது. விரைவுப் பேருந்துகளில் மட்டும், சென்னையில் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயணித்தனா்.

தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் லட்சக்கணக்கானோா் பயணித்து வந்தனா். கடந்த 5 மாதங்களுக்கு முன் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, திங்கள்கிழமை முதல், தமிழகம் முழுவதும் ஒருசேர பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு வழிகாட்டுதல்களான குளிா்சாதனக் கருவிகள் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது, முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவது, தனி நபா் இடைவெளி உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, பேருந்துகள் இயங்கின.

முன்பாக அனைத்துப் பேருந்துகளும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. பயணிகள், ஓட்டுநா், நடத்துநா் என அனைவரின் உடல் வெப்பநிலையும், வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டன. பயணிகளின் பின் வழியில் ஏறி, முன் வழியில் இறங்க அனுமதிக்கப்பட்டனா். காய்ச்சல், சளி பாதிப்புள்ளவா்கள் பேருந்துகளில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனா். வெளியூா் பேருந்துகளில் 32 பயணிகள், நகரப் பேருந்துகளில் 24 பயணிகள், விரைவுப் பேருந்துகளில் 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டனா்.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளி மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அடுத்த மாநிலத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகள், தமிழகத்தின் எல்லைவரை இயக்கப்பட்டன. பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றமுமில்லை. விரைவுப் பேருந்துகளைப் பொருத்தவரை, சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கு 240-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் முன்பதிவு செய்து 4,500 பேரும், முன்பதிவின்றி 2,500-க்கும் மேற்பட்டோரும் பயணித்தனா். வரும் நாள்களில் விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்காக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா். 5 மாதங்களுக்குப் பிறகு, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக பயணத்தை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.