வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு: ஸ்டாலின் கண்டனம்

விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
மு.க.ஸ்டாலின்.
Updated On :18 செப்டம்பர் 2020, 10:14 am

DIN

விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம்” எதைக் கடுமையாக எதிர்த்து - அதன் மத்திய அமைச்சராக இருந்த ஹர்ஸிம்ரத் கௌர் பாதல் ராஜினாமா வரை சென்றுள்ளாரோ; அதற்குக் காரணமான, மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்களுக்கு - விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு; மக்களவையில், அந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே; அ.தி.மு.க. மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

விவசாயிகளின் விளைபொருட்களை “கார்ப்பரேட்” நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுப்பது “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்”. வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டமும், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டமும் - தமிழக விவசாயிகள் மட்டுமின்றி - ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்தச் சட்டங்களை, “விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள்” என்றும், “தமிழகப் பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள்” என்றும் கூறி அ.தி.மு.க. ஆதரித்திருப்பது, “விவசாயி”களுக்கு இதுவரை  செய்த பாதகமெல்லாம் போதாது என்று - மன்னிக்க முடியாத துரோகத்தையும் தற்போது செய்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று சட்டங்கள் - கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மை விவகாரத்திலும், மூக்கை நுழைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, சகித்துக் கொள்ள முடியாத சர்வாதிகாரம். “ஆன்லைன் வர்த்தகம்” செய்யும் விவசாயி, நிச்சயம் “பான் நம்பர்” பெற்றிருக்க வேண்டும் என்பது - வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவசாயத்தை “வருமான வரி வரம்பிற்குள்” கொண்டு வரும் சதி! 

பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் - விவசாயிகளுக்கும் - தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்தச் சட்டங்களைத்  திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது. ஆனால் ஊழல்களில் புரையோடிப் போயிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு- வழக்குகளில் இருந்து  தப்பித்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள - எஞ்சிய இன்னும் சில மாதங்கள் “பா.ஜ.க.,வின் பாதுகாப்பில்” ஒளிந்து கொண்டு, கஜானவை மேலும் கொள்ளையடிக்க - மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆதரவளித்து - விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார்.                      

முதல்வர் பழனிசாமியை நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்; இனியொரு முறை மேடைகளில் நின்று “நான் ஒரு விவசாயி” என்று மட்டும் சொல்லாதீர்கள் “ப்ளீஸ்”! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.