மக்கள் பாதை இயக்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு 

மக்கள் பாதை இயக்கத்தினரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்.

மக்கள் பாதை இயக்கத்தினரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன.

13 உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வைத் தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ஆம் தேதி முதல் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கத்தின் தலைமையகமான, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு ரத்து என்பது சட்டப் போராட்டம், நீதிமன்றப் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக அடைய வேண்டிய இலக்கு ஆகும். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மக்கள் பாதை மாநிலக்குழு உறுப்பினர் சந்திரமோகன் கூறி இருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆரா அருணா, சந்திரமோகன், அரவிந்த், தமிழ்செல்வி, கீதா, காசிநாகதுரை - ஆறு பேரின் அளப்பரிய தியாக உணர்வைப் பாராட்டும் அதே வேளையில், உங்களது போராட்ட நோக்கத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துவிட்டீர்கள், எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என்பதைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது உள்ள உறுதியைக் கொண்டு மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com