காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது!

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அன்புமணி.
அன்புமணி.

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு அனைத்து அனுமதிகளும் அளிக்க வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா  கோரிக்கை விடுத்திருக்கிறார். இரு மாநில உறவுகளை சிதைக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் எந்த கோரிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு அப்போதைய குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று  ரூ.5,912 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அத்துடன் அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது. அதேபோல், மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியையும், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, கர்நாடகத்துக்கு மத்திய அரசு அளித்து விட்டால், தமிழக விவசாயிகளில் நிலைமை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அப்படியெல்லாம் நடந்து விடாது என்று உத்தரவாதம் பெற முடியாத நிலை நிலவுவது தான் நமது கவலைக்கும், அச்சத்துக்கும் காரணமாகும்.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி எனக்கு உத்தரவாதம் அளித்தது போன்று, இப்போதுள்ள நீர்வள அமைச்சர் அல்லது பிரதமரிடமிருந்து உத்தரவாதம் கிடைத்தால் மட்டும் தான் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். எனவே,  அத்தகைய உத்தரவாதத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டும்; அத்துடன் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இதை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com