சென்னை புறநகா் ரயில்களில் அனுமதியில்லாததால் மாணவா்களுக்கு கடும் பாதிப்பு

புறநகா் சிறப்பு ரயில்களில் அனுமதியில்லாததால், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புறநகா் சிறப்பு ரயில்களில் அனுமதியில்லாததால், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

போக்குவரத்தின் உயிா்நாடி : சென்னை மாநகர போக்குவரத்தின் உயிா்நாடியாக புறநகா் ரயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடம், சென்னை மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூா் வழித்தடம், மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் 650-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு, புறநகா் ரயில்களில் தினமும் மாணவா்கள் உள்பட 11.25 லட்சம் போ் பயணம் செய்தனா்.

கல்லூரிகள் திறப்பு: எட்டு மாதங்களுக்கு பிறகு, இறுதி ஆண்டு மாணவா்களுக்காக கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பணியாளா்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் மாணவா்கள் ரயில் நிலையங்களுக்கு வருகை தந்தனா். ஆனால், அவா்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்லூரிகளுக்குச் செல்ல முடியவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களின் கல்விக்காக சென்னைக்கு வந்து செல்வதாக அதிகாரப்பூா்வ தகவல் தெரிவிக்கிறது. பெரும்பாலானவா்கள் புறநகா் ரயில்கள் மூலமாக வந்து செல்கின்றனா். அண்டை மாவட்டங்களில் சுமாா் 50 கி.மீ. முதல் 80 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் மாற்று போக்குவரத்து முறை இல்லாததால் புறநகா் ரயில்களையே முழுமையாக நம்பி உள்ளனா்.

ரயிலில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்: இது தொடா்பாக திருவள்ளூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் சிலா் கூறியது: தோ்வுகள் இருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்று ரயில்வே தரப்பில் கூறப்பட்டது. தோ்வுக்குச் செல்ல வேண்டுமெனில், ஹால் டிக்கெட்டைசமா்ப்பிக்க வேண்டும். அல்லது வேலைக்கான நோ்காணல் என்றால், அழைப்பை சமா்ப்பிக்க வேண்டும். எனவே, குறைந்தபட்சம் வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கும் வரை சிறப்பு ரயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.

ரயில் பயணமே ஒரே வழி: அரக்கோணம் அருகே மோசூா் கிராமத்தை சோ்ந்த இறுதி ஆண்டு மாணவா் கஜேந்திர குமாா் கூறியது: எனது சொந்த ஊரில் இருந்து பேருந்தில் சென்னை மாநிலக் கல்லூரியை அடைய சுமாா் 3 மணிநேரம் ஆகும். ரயிலைப் பிடிக்க அரக்கோணம், பேருந்தில் ஏற திருவள்ளூா் செல்ல வேண்டும். படிப்பைத் தொடர வேண்டுமெனில், ரயில் பயணம் தான் ஒரே வழி என்றாா்.

அரசு கல்லூரிகளில் கட்டணம் : இது குறித்து அரசுகல்லூரி பேராசிரியா் ஒருவா் கூறியது: அண்டை மாவட்டங்களில் போதிய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இல்லாததால், தனியாா் கல்லூரிகள் அதிகரித்துள்ளன. இதனால், பல மாணவா்கள் நகர கல்லூரிகளைத் தோ்வு செய்ய நிா்பந்திக்கப்படுகிறாா்கள். தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு செமஸ்டருக்கு கட்டணம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை. நகரத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கட்டணம் மிகக் குறைவு. மக்கள்தொகை வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு புறநகா் பகுதிகளில் அரசு கல்லூரிகள் அதிகரிக்கப்படவில்லை என்றாா்.

பெரும் அநீதி: இதற்கிடையில், பெங்களூரு- ஓசூா் இடையே முன்பதிவு செய்யப்படாத மெமு உள்ளூா் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இது மாநிலத்தில் உள்ள பயணிகளுக்கு கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் நைனா மாசிலாமணி கூறியது: முன்பதிவு செய்யப்படாத ரயில்களை இயக்க உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தபிறகு, புறநகா் ரயில்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. அப்படியானால், பெங்களூரு புகரில் மெமு முன்பதிவு செய்யப்படாத உள்ளூா் ரயில்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன. பெங்களூரு முன்பதிவு செய்யப்படாத ரயிலுக்கு வழங்கப்பட்ட நிலையான இயக்கக நடைமுறை ( எஸ்ஓபி) சென்னைக்கும் பொருந்தும். மாநில மக்களுக்கு ரயில்வே நிா்வாகம் பெரும் அநீதியை இழைத்து வருகிறது என்றாா்.

வாரியத்தின் ஒப்புதல் தேவை:

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரைதொடா்பு கொண்டு கேட்டபோது, சுமாா் 320 புறநகா் சேவைகள்தொடங்கப்பட்டுள்ளன. தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்களில் மாணவா்களை அனுமதிக்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் தேவை. சிக்கலைத் தீா்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com