இசைமேதை விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிக்கு நினைவுத்தூண் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமிக்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட
’ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி நினைவுத் தூணினை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.’
’ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி நினைவுத் தூணினை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.’


விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமிக்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட நினைவுத்தூண் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் மேதையாகத் திகழ்ந்த விளாத்திகுளம் ஸ்ரீ நல்லப்ப சுவாமியின் நினைவைப் போற்றும்விதத்தில் அவருக்கு மணிமண்டபமும், அவரது நினைவாக இசைப் பள்ளியும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தினமணி நாளிதழில் கடந்த 2017, ஜூலை 11-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள இசை அன்பர்கள், கிராமியக் கலைஞர்கள், விளாத்திகுளம் தொகுதி மக்கள் உள்ளிட்டோர் இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகளின் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமியின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுத் தூண் அமைக்க ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். 2019, ஜனவரியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில், நினைவுத் தூண் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நடைபெற்று பணி தொடங்கியது.

பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து, நல்லப்ப சுவாமி நினைவுத் தூண் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து நினைவுத் தூணை திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, விளாத்திகுளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.சின்னப்பன் ஆகியோர் அவரது நினைவுத் தூணில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லப்ப சுவாமியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், நல்லப்ப சுவாமியின் வழித்தோன்றல்கள், இசை அன்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணிக்கு நன்றி: "இசை மேதை நல்லப்ப சுவாமிக்கு பெருமை சேர்க்கும்விதமாக விளாத்திகுளத்தில் மணிமண்டபமும், இசைப் பள்ளியும் அமைய வேண்டுமென வலியுறுத்தி 2017-ஆம் ஆண்டு தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியின் தாக்கம்தான் மக்கள் பிரதிநிதிகள் மூலம் அரசின் கவனத்துக்கு சென்று இன்றைக்கு நினைவுத் தூணாக செயல்வடிவம் பெற்றிருக்கிறது. விரைவில் இசைப் பள்ளியும் அமையவிருக்கிறது. 

ஆகவே, தினமணி நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என விளாத்திகுளம் ஸ்ரீநல்லப்ப சுவாமிகள் ஆன்மிக கலை இலக்கிய இசை மன்றத்தினர் மற்றும் இசை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

விளாத்திகுளத்தில் இசைப் பள்ளி "இசை மேதை நல்லப்ப சுவாமி
யின் நினைவைப் போற்றும் வகையில் விளாத்திகுளத்தில் இசைப் பள்ளி அமைக்க வேண்டுமெனவும், திருவையாறுபோல் ஆண்டுதோறும் அரசின் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமெனவும் விளாத்திகுளம் மக்களிடமிருந்து கோரிக்கை வந்தது. இதனை அரசு பரிசீலனை செய்து, நல்லப்ப சுவாமியின் நினைவுத் தூண் அமைந்துள்ள வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இசைப் பள்ளி கட்ட முடிவெடுத்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அடுத்த ஆண்டு நல்லப்ப சுவாமியின் பிறந்த நாள் விழா நடைபெறுவற்கு முன்னதாகவே இசைப் பள்ளி கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும்' என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com